சீனாவில் செர்ரிப் பழங்களைத் திருடி வந்த முள்ளெலிக்கு பழங்களைக் கொடுத்து உதவினார் காவலர் ஒருவர்.
செர்ரிப் பழங்களைத் திருடிச் செல்லும் முள்ளெலி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. சீனாவில் சுவான்செங் என்ற இடத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் லின் யங். இவர் காவல் நிலையத்துக்கு அருகில் செர்ரிப் பழச் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நன்றாக பழுத்து தரையில் உதிர்ந்த செர்ரிப் பழங்கள் அவ்வப்போது காணாமல் போயுள்ளது.
பழங்கள் காணாமல் போவதைக் கண்ட காவலர், பழத்தை யார் எடுத்து செல்கிறார் என்பதை கண்டுபிடிக்க தீவிரமாக கண்காணித்து வந்தார். அப்போது அருகில் வளை தோண்டி மறைந்திருந்த முள்ளெலி ஒன்று செர்ரிப் பழங்களின் அருகில் வந்து சுருண்டு படுத்துக் கொண்டு தனது முள்ளில் அதனை எடுத்துச் சென்றதைக் கண்டுபிடித்தார். இதனை பார்த்த அனைத்து காவலர்களும் வியப்பில் மூழ்கினர்.
இதையடுத்து மேலும் பல செர்ரிப்பழங்களை செடியில் இருந்து பறித்த லின் யங், முள்ளெலியின் வளையின் அருகே வைத்தார். இந்த வீடியோ சமூக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.