11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இரு மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஒரே மொழிப்பாடம் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.
பள்ளி பொதுத்தேர்வுகளில் மீண்டும் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்குப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களில் இரு தாள்களுக்கு பதிலாக ஒரே தாள் தேர்வுமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை. தற்போது, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 பாடங்களும் தலா இரண்டு தாள்கள் தேர்வு எழுதும்முறை உள்ளது. இதை ஒரே தாளாக மாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதேபோல 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இரு மொழிப்பாடங்களா பதிலாக ஒரே மொழிப்பாடம் தேர்வுசெய்யும் முறையை அமல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை பரிந்துரை செய்துள்ளது. இது அமலுக்கு வரும்பட்சத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்.
இதனால் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக மாற்றமபெற இருக்கிறது. மேலும், பாடத்துக்கு 100 மதிப்பெண் வீதம் 600 ஆக உள்ள மொத்த மதிப்பெண் அளவு இனி 500 மதிப்பெண் ஆக மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்தப் பரிந்துரை தொடர்பாக முழுமையான ஆலோசனைக்குப் பிறகு வரும் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு இவற்றை அமல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.