பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக, வீடியோ மற்றும் புகைப்படங்கள் பொதுவெளியில் பகிர்வதை தடுக்க, சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிபிசிஐடி.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சியில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மிரட்டி, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகப் பதிவுசெய்து வந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக கல்லூரி மாணவர், வழக்கறிஞர், மாதர் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, சிபிஐக்கு மாற்றி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
கோவை எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கலாம்
பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் தந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதாக கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
“கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுபடி, அரசு எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். அந்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையை மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கினால் போதும்” எனத் தெரிவித்தார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு .
சிபிசிஐடி விசாரணை
பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை காட்டி, அவரை விசாரித்துவருகின்றனர். அதேநேரத்தில், சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை சிறையில் வைத்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
வலைதளங்களுக்கு நோட்டீஸ்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தங்களுடைய விசாரணைக்கு இடையூராக இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளனர்.