பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்குப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள், கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தால், அவர்களது அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது என சட்டம் கூறுகிறது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசு இதை கடைபிடிக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை அரசு வெளியிட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இதைகேட்ட நீதிபதிகள், “பல்வேறு பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், துணிச்சலாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அவரின் அடையாளத்தை இப்படி பொதுவெளியில் வெளியிட்டால், பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எப்படி துணிச்சலாக புகார் தெரிவிப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்கள். இதைதொடர்ந்து, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், விதிகளையும் சட்டங்களையும் அறிந்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர். மேலும், கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதியதாக அரசாணை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.