பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்துவருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி ஒரு கும்பல் மிரட்டிவந்தது. இந்த சம்பவம் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் வீடியோவுடன் நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனிடையே வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக நக்கீரன் கோபால் வரும் 30ஆம் தேதி கோவையில் நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை எதிர்த்து நக்கீரன் கோபால், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு எப்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாகவும், அதுவரையில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியன்று நக்கீரன் கோபால் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
இதனிடையே, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வாசு என்பவர் தொடர்ந்த மற்றொரு வழக்கும் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பணியில் உள்ள நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், அதில் சமூக நல அமைப்புகள் மற்றும் பெண்கள் இடம் பெற வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார். இந்த வழக்கின் விசாரணை குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.