Zomato இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உணவு விநியோகச் சேவையை வழங்கி வருகிறது. பல்வேறு உணவகங்களிலிருந்து எல்லா வகையான உணவுகளையும் இந்நிறுவனத்தின் செயலி மூலம் வீட்டிலிருந்தே பெறமுடியும். தொடக்கம் முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சர்சைகளையும் சந்தித்து வரும் சொமட்டோ நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு இந்துத்துவவாதிகளின் மதவாதத் தாக்குதலுக்கு ஆளானது. அப்போது உணவுக்கு மதமில்லை என்று சொமட்டோ அளித்த பதில் வரவேற்பையும் அதிருப்தியையும் ஒருங்கே பெற்றது!
அந்த சர்சை சற்று ஓய்ந்துள்ள இந்நிலையில் மீண்டுமொரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த சொமட்டோ ஊழியர்கள் சிலர் ‘நாங்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை விநியோகிக்க மாட்டோம்; அதனை விநியோகிக்க எங்களை கட்டாயப்படுத்தக்கூடாது’ என்று கூறி இன்று (ஆகஸ்டு 12) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி அந்நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹௌராவைச் சேர்ந்த எங்கள் நிறுவனக் கூட்டாளர்கள் சிலர் இதுபற்றி தங்கள் கருத்துகளைக் கூறியுள்ளார்கள். இவ்விவகாரத்தை விரைவில் தீர்க்கவே முற்படுகிறோம்’ என்று தெரிவிக்கிறது. மேலும் பணியில் சேரும்போதே இப்பணியின் தன்மை பற்றியும் நடைமுறை இயல்பு பற்றியும் ஐயத்திற்கு இடமின்றி விளக்கமளித்திருக்கிறோம்; எங்கள் பங்குதாரர்களும் இதனை விளங்கிக்கொண்டுள்ளார்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா பல மதங்களும் பல இனங்களும் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு பல வகையான உணவுப்பழக்கவழக்கங்கள் உண்டு. சைவம், அசைவம், மாட்டுக்கறி உண்போர், பன்றிக்கறி உண்போர் என பல வகையான மக்கள் வசிக்கின்றனர். ஒருவரது உணவுப்பழக்கத்தை மற்றவர் மதித்து வாழ்வதே இந்தியாவின் பன்முகத்தன்மையை போற்றும் செயலாகும். மேலும் சொமட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனத்தின் பணி இயல்பு பற்றி நன்கு அறிந்தும்கூட இவ்வாறான சர்ச்சைகள் எழுப்புவது நாடெங்கும் இந்துத்துவப் போக்கு வீரியமடைவதைக் காட்டுகிறது.