சாகித்ய அகடாமி விருது பெற்ற 74 வயதான மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவு காரணாமாக இன்று (மே 10) இயற்கை எய்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் 1944ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தார் முஹம்மது மீரான். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’, ‘கூனன் தோப்பு’, ‘சாய்வு நாற்காலி’, ‘அஞ்சுவண்ணன் தெரு’ ஆகியவை மீரானின் சாதனைப் படைப்புகள். இவரது முதல் சிறுகதை வெளியாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. 1997 ஆம் ஆண்டு இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
முஹம்மது மீரான் 6 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும், மேலும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மொழி, கதை சொல்லும் விதம், வடிவ நேர்த்தி என எழுத்துப் படைப்பில் தனித்துவம் கொண்டவர் இவர். இந்த தனித்துவத்தினால் இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளை தன்வசம் சொந்தமாக்கிக் கொண்டார்.
எழுத்தின் மீது தீராத பசிகொண்ட தோப்பில் முஹம்மது மீரான், வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் இயற்கை எய்தினார்.
அவரது உடல் திருநெல்வேலியில் உள்ள வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் மீரான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.