மக்களவை தேர்தலையொட்டி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்குவதை நிறுத்திவைத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காகக் கணக்கெடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவந்தன. இந்நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைச் சரியாக அடையாளம் காணும்வரை ரூ.2,000 நிதியுதவி திட்டத்துக்குத் தடை விதிக்ககோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே அசல் அரசாணை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ரூ.2,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைத் தேர்தலுக்குப் பின்னர் தள்ளிவைத்தனர்.