லயோலா கல்லூரியின் மாணவர் அமைப்பிற்கு முதன்முறையாக ஒரு திருநங்கை இணை செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நலீனா ப்ரஷீதா! பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல், இடைநின்றவர்தான் இவர். பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை பள்ளிக்குச் செல்லாமல், சொந்தமாக விண்ணப்பித்து எழுதி தேர்ச்சி பெற்றவர். தற்போது லயோலாவில் விஸ்காம் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
சமீபத்தில்தான், லயோலா கல்லூரி மிருதுளா, தியா என்ற இரண்டு திருநங்கை மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பில் சேர அனுமதி கொடுத்திருந்தது. தொடர்ச்சியாக, தற்போது நலீனாவை மாணவர்கள் இணை செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மாணவர்களின் தேவைகளை நிச்சயம் தான் பேசுவதாகத் தெரிவித்திருக்கிறார் நலீனா. மேலும், பெண்களின் உரிமைகளுக்காகக் கல்லூரியில் எல்லா தளங்களிலும் குரல் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுவழி சமூகத்துக்கு தங்களுக்கான உரிமைகளைப் புரிய வைப்பதில் தொடங்கி, திருநங்கைகளுக்கான சட்டத் திருத்தத்தில் அடிப்படை மாற்றங்கள் உருவாக்குவது வரை ஒவ்வொரு நிலையிலும் நாம் அவர்களுடன் இணைந்து நிற்பது அவசியமாய் இருக்கும்போது, ஒரு கல்லூரியின் மாணவர் அமைப்பில் இளைஞர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பில் ஒரு திருநங்கை மாணவியை முன்னிறுத்தும்போது அது வலிமையான நம்பிக்கையை கொடுக்கிறது.