வங்கக்கடலில் வரும் 29ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 23) செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன். அப்போது பேசிய அவர், ”இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் வரும் 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகவுள்ளது. இந்த நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 27ஆம் தேதி வலுப்பெறும். பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
29ஆம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்த புவியரசன், அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகச் சேலம் ஆத்தூரில் 10 செ.மீ. மழையும், தேனி பெரியகுளம், கடலூர், மேட்டூர், ஓசூர், கொடைக்கானல் ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழையும், ஊத்தங்கரை, காஞ்சிபுரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார் புவியரசன்.