பீகார் மாநிலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் 61 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாய் உள்ளது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனர். பீகார் தலைநகர் பாட்னாவில் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
அவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய மாவட்டங்களில் கடும் அனல்காற்று வீசி வருகிறது. சனிக்கிழமை இரவு வரை 44 பேர் உயிரிழந்த நிலையில், ஞாயிறு அன்றும் வெயிலின் தாக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஏற்கெனவே தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் வரும் 19ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் எனப் பீகார் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அனல் காற்று வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அதி தீவிர வெப்ப அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.