கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பாலக்காடு பகுதியில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சாலை முழுவதும் காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இது இயற்கை திரும்பக் கொடுத்த பரிசு எனவும் பலர் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கன மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இரண்டரை லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 8 முதல் 11ஆம் தேதி வரை வெள்ளத்தால் சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களைப் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் 8 மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், பாலக்காடு பகுதியில் உள்ள சாலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட பல பிளாஸ்டிக் கழிவுகள் வெள்ளத்தால் அடித்துவரப்பட்டு சாலையில் தேங்கி நிற்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் சாலை முழுவதும் காணப்படும் அந்த காட்சி படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி பிரவின் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இயற்கை தாய்க்கு நாம் பரிசளித்த பிளாஸ்டிக் அத்தனையும் திரும்ப நமக்கே பரிசாக கொடுத்துள்ளது. பிளாஸ்டிக்கு அழிவே இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில் இந்தக் காட்சி மிகவும் வைரலாக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் எனவும் பிளாஸ்டிக்கை எவ்வாறு வேறு ஆற்றலாக மாற்றலாம் என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.