வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், பிரபல சினிமா திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷிற்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெறுகிறது.
வருமான வரி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பெரிய முதலாளிகளை குறிவைத்து, வருமான வரித்துறைச் சோதனை நடத்திவருகிறது.
அந்தவகையில், சென்னையில் உள்ள அவரது இல்லம், பல்கலைக்கழகம் அவருக்கு தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலங்கானாவில் உள்ள மூன்று இடங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், காலை ஏழு மணியளவில் இந்தச் சோதனை தொடங்கியது. சேத்துப்பட்டுவில் உள்ள ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்தில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இங்கு சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.o திரைப்படத்தில் ஐசரி கணேஷ் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி. படத்தையும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்குவதால், பெரிய அளவில் பணம் கைமாறுகிறதா என்பதை கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டறை அமைத்து, வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்தச் சோதனை குறிப்பிடத்தக்கது. சோதனையில் கைப்பற்றபட்டவைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை அதிகாரிகள் அறிவிக்கவில்லை.