பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

2018, மே 22ஆம் தேதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு கடந்த 2018, மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என 2018ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும்படி உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும், இது குறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மனு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மனு தாக்கல் செய்தது. ஆலையை மூடியது சட்டவிரோதம் என்றும், ஆலைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறப்பதற்கோ, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கோ, எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு   நீதிபதிகள் சத்திய நாராயணன், நிர்மல்குமார்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் பழுதாகி வீணாவதாக வாதிட்டார், வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமாசுந்தரம்.

ஆலை மூடப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பராமரிப்பு பணிக்காக ஆலையை இயக்க இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார். இதைதொடர்ந்து, மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆலையை திறக்க அனுமதியில்லை

இதற்கிடையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பையும் மனுதாரராக ஏற்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் உத்தரவிடும் முன் தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த வழக்கில் வைகோவை சேர்க்கக் கூடாது என்று வேதாந்தா குழுமம் சார்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் ஒரு நிறுவனத்திற்காக அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு அப்பகுதியில் தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், அன்றைய தினம் இடைக்கால கோரிக்கை குறித்து வாதங்களை முன்வைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.