தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்பட்டுள்ளன. இதில், 95.2 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 98.53% சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 29ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 9.96 லட்சம் மாணவ, மாணவிகள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இன்று 10ஆம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 97% சதவீதம் மாணவிகளும், 93.3% சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.7% சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டம் 98.53% சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் 98.48 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், 98.45% சதவீதம் தேர்ச்சி பெற்று நாமக்கல் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
10ஆம் வகுப்பு தேர்வில், 6,100 பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 92.48% சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.53% சதவீதம் தேர்ச்சியும், மெட்ரிக் பள்ளிகள் 99.05% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன.
பாடவாரியான தேர்ச்சி விகிதம்:
தமிழ் – 96.12%
ஆங்கில – 97.35%
கணிதம் – 96.46%
அறிவியல் – 98.56%
சமூக அறிவியல் – 97.07%
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவைத் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளில் தற்காலிக சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மே 6 முதல் மதிப்பெண் சான்றிதழை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறுகிறது.