அசுத்தமான ரத்தம் ஏற்றப்பட்டதால், 15 கர்பிணி பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.
சுகாதாரமற்ற இரத்தம் ஏற்றப்பட்டதால், தமிழகத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 15 கர்பிணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த சம்பவங்கள் தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளில் இருந்து செலுத்தப்பட்ட கெட்டுபோன இரத்தம் நடைபெற்றது எனவும் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் ஏற்படும் மரணங்கள் குறித்து மூத்த மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேதபரிசோதனை அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்தவங்கிகளில் பாதுகாக்கப்பட்ட அறைகளில் நிலவிய வெப்பநிலை மாற்றதால் இரத்தம் கெட்டுபோனதாகவும், ஆனால் இதை ஆய்வுசெய்த மருத்துவர்கள், இரத்தம் நல்ல நிலையில் உள்ளதாக சான்றிதழ் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் இதற்கு காரணமான ரத்த வங்கியின் அதிகாரிகள் மருத்துவர் எம்.சந்திரசேகர், மருத்துவர் நாராயணசாமி (கிருஷ்ணகிரி, அரசு மருத்துவமனை), மருத்துவர் சுகந்தா(ஒசூர் அரசு மருத்துவமனை) மீது சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இதுபோன்ற ஒரு ஒரு சம்பவம் நடைபெறவில்லை என தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து ஊரக நலப்பணி இயக்ககம், மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் 5பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் இவர்கள் மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டது என்பது குறிப்பிடதக்கது.