தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதிகபட்சமாக ஆங்கில பாடத்திற்கு 309 காலிப்பணியிடங்களும், தமிழ் பாடத்திற்கு 232 காலிப்பணியிடங்களும், கணிதம் 192 காலி பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
இந்த காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டது. முதுகலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தேர்வில் தேர்ச்சி அல்லது பிஎச்டி முடித்த 57 வயதுக்கு உட்பட்டவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக M.phil, phd பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.
செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.87,700 முதல் ரூ.1,82,400 வரை ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.