பணப்பரிவர்த்தனைச் செய்ய SWIFT மென்பொருள் பயன்படுத்தியதில் மோசடி செய்ததாகக்கூறி பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 36 வங்கிகளுக்கு 71 கோடி ரூபாய் அபராதம் விதித்திக்கப்படுள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
வங்கிகள் சர்வதேச அளவில் பணப்பரிமாற்றம் செய்யும்போது தகவல் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் SWIFT. இந்திய வணிகர் ஒருவருக்கு வெளிநாட்டில் வணிகத்தை விரிவுபடுத்த கடன் தேவைப்படும்போது இந்திய வங்கிகள் இங்கிருந்து அந்தக் கடனுக்கான உத்தரவாதத்தை SWIFT மென்பொருள் மூலமே அளிக்கும். இதற்கு முன்னர், இந்த SWIFT மென்பொருளை தவறாகப் பயன்படுத்தி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடியில் நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி உள்ளிட்டவர்கள் ஈடுபட்டதாகக் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மிகப்பெரிய மோசடிக்குப் பிறகு SWIFT-ஐ வங்கிகள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததுமட்டுமில்லாமல் இதைத் தவறாகப் பயன்படுத்தும் போதெல்லாம் சம்மந்தப்பட்ட வங்கிகள்மீது ஆர்பிஐ கோடி கணக்கில் அபராதம் விதித்து வருகிறது.
ஆனால் அவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தப் பிறகும் பணப்பரிவர்த்தனைச் செய்ய SWIFT மென்பொருள் பயன்படுத்தியதில் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பேரில் பஞ்சாப் நேஷ்னல் வங்கிமீது 2 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதே காரணத்திற்காக பஞ்சாப் நேஷ்னல் வங்கி மட்டுமல்லாமல் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்எஸ்பிசி, பாங்க் ஆஃப் பரோடா, சிட்டி வங்கி, கனரா வங்கி மற்றும் யெஸ் வங்கி என 36 பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் மீதும் ஆர்.பி.ஐ 71 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.