மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்ற விவரங்களை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரித் தண்டலர், வரைவாளர் ஆகிய பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 14ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.

மேலும், தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலும் அல்லது www.tnpscexam.net என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்ணயித்துள்ளது. ஜூலை 16ஆம் தேதிக்குள் எழுத்துத்தேர்வுக்கான கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வானது செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தோருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.