நடிகர் சிவக்குமார் திருப்பதி கோவில் குறித்து அவதூறாக பேசிவிட்டார் எனச் சொல்லி ஓராண்டுக்கு முன் அவர் பேசிய பேச்சு தொடர்பாக இப்போது அவர் மீது புகார் அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
பல மாதங்களுக்கு முன் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ( சன்.டி.வி ) சாமி குளிக்கும்போது காட்டுறாங்க ஆனால், உடை மாற்றும்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறார்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிவிட்டார் என்று சொல்லி தற்போது அவருக்கு எதிராக திடீரென்று கொந்தளிக்கிறது ஒரு கூட்டம்.
சிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் என்று பார்ப்பனீயவாதிகளால் குறிவைக்கப்படும் இவர்கள் பேசிய கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையா ? இவர்கள் பேசிய கருத்துக்களால் பெரும்பான்மை இந்து சமூகத்தின் மனம் புண்பட்டு விட்டதா என்றால் நிச்சயம் இல்லை. ஏனென்றால் இவர்கள் பேசிய கருத்துக்களை இவர்களுக்கு முன்பாக பார்பனர்களே பேசியிருக்கிறார்கள். இவர்கள் கோபப்பட வேண்டும் எனில், இவர்களுக்கு முன் இதே கருத்துக்களைச் சொல்லிய பார்ப்பனர்கள் மீதுதானே கோபம் கொள்ள வேண்டும்.
பார்ப்பனர்கள் சொன்ன கருத்துக்களையும், பாட்டாளி சமூகத்தின் குரல்களாக இவர்கள் பதிவு செய்த கருத்துக்களையும் ஓர் ஒப்பீடு செய்யலாம்.
சமீபத்தில் சிவக்குமார் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இருந்தே தொடங்குவோம்.
சிவக்குமார் பேச்சின் சாரம் இதுதான், “ மிகுந்த சிரமப்பட்டு விரதம் எல்லாம் இருந்து, பாதயாத்திரையாகவே திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தனால் ஒரு நிமிடம் கூட சாமியைப் பார்த்து வழிபட முடியாது. ஜரிகண்டி, ஜரிகண்டி என்று விரட்டி விட்டுவிடுவார்கள். ஆனால், மிகப்பெரும் செல்வந்தராக இருந்தால் அவர் சுத்தமேயின்றி கோவிலுக்கு வந்தாலும் அவருக்கு பெரும் மரியாதை அளிக்கப்படும்.” இதுதான் அவர் பேசியது. இது பரவலாக எல்லா கோவில்களிலும் நடக்கும் நிகழ்வுதானே. இதே குற்றச்சாட்டுக்களை முன் வைத்துத்தானே தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை ஆன்மீகப் பெரியவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கோரி்க்கை வைத்து வருகின்றன.
அவர்கள் மீது யாரும் கோபம் கொள்வதில்லையே ஏன் ? இதே திருப்பதி கோவிலில் பணம் படைத்தவர்களையும், விஜபிக்களும்தான் எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி கோவிலைச் சேர்ந்த பார்ப்பனர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் ( சன்.டி.வி ) பேட்டி கொடுத்தாரே , அவர் மீது ஏன் கோபம் கொள்ளவில்லை. இவர்கள் மீதெல்லாம் வராத கோபம் நடிகர் சிவக்குமார் மீது வருகிறதென்றால் காரணம் இரண்டுதான். ஒன்று அவர் பார்ப்பனர் இல்லை. இரண்டாவது காரணம் அவர் அந்த கருத்தரங்கில் திருப்பதி கோவிலைப் பற்றி மட்டும் பேசிவிட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் கோவில்களில் இன்னமும் சாதிய அடக்குமுறை இருக்கிறது. கோவிலைக் கட்டும் வரை கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்கு அதன் பின் அனுமதி மறுக்கப்படுகிறதென்றால் அது சாதி வெறியின்றி வேறென்ன ? என்ற கேள்வியை சிவக்குமார் எழுப்பினார். இந்தக் கேள்வியை ஒரு நாத்திகவாதி எழுப்பியிருந்தால் பார்ப்பனர்கள் கடந்து போயிருப்பார்கள். கடவுளை நிந்திக்கிறவர்கள் ஏன் இதைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று வழக்கமான கேள்வியைக் கேட்டு அதை மடைமாற்றம் செய்திருப்பார்கள். ஆனால், இறை நம்பிக்கை உடைய உலகத்தமிழர்கள் அனைவரும் மதிக்கின்ற ஒரு மூத்த நடிகர் அதைக் கேட்கின்றபோது , பார்ப்பனர்களுக்கு அச்சம் வந்துவிடுகிறது. தங்கள் அடிமடியிலேயே இவர் கை வைக்கிறாரே என்ற அச்சம். அதை நேரடியாகக் கூற முடியாமல் இந்துக் கடவுகள்களை இழிவுபடுத்துகிறார் என்று சொல்லி இந்துச் சமூகத்தில் இருக்கும் இடைநிலைச் சாதிகளை, அவர்கள் மொழியில் சொல்வதென்றால் சூத்திரர்களை சிவக்குமார் போன்றவர்களுக்கு எதிராக திருப்பும் முயற்சியைத் தொடங்குகிறார்கள். சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் பார்ப்பனீயத்திற்கு எதிரான அவர்களின் கருத்துக்கள் தொடர்ந்து பொது வெளிச் சமூகத்தில் பேசு பொருளாகி விடாமல் இருக்கும்படி அவர்களை மிரட்டுகிறார்கள்.
இனி ஜோதிகா கூறிய கருத்துக்களுக்கு வருவோம். கோவில்களுக்கு செலவிடும் பணத்தை பள்ளிகள் கட்ட பயன்படுத்தலாமே என்பதுதான் ஜோதிகா கூறிய கருத்து.
இதற்கு ஏன் இத்தனை கொந்தளிப்பு. காரணம் இருக்கிறது.
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே..
என்ற திருமூலரின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு, நம்ம மனசுதான் கோவில். அதை சுத்தமா வச்சுப்போம். சாமியை வீட்டில் இருந்தே வழிபடுவோம் என்ற முடிவுக்கு மக்கள் சென்று விட்டால் பெரும் இழப்பு யாருக்கு என்று சிந்தியுங்கள். நிச்சயம் பார்ப்பனர்களுக்குத்தான். ஏனெனில் அவர்கள்தான் கோவில்களை வைத்து வயிறு வளர்கிறார்கள். யாரும் கோவிலுக்கு செல்லவில்லை அல்லது கோவிலுக்குச் சென்றாலும் அங்கு பணம் கொடுப்பதில்லை அதற்கு மாறாக ஏழைகளுக்கு உதவிகள் செய்யத் தொடங்கிவிட்டார்கள் என்றால் பார்ப்பனர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
அந்த அச்சமே ஜோதிகாவிற்கு எதிராக கொந்தளிக்க வைக்கிறது.
சரி, ஜோதிகா சொன்னதற்காக கோபப்படும் இவர்கள், “
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்று பாரதி பாடிச் சென்றுள்ளானே அவன் மீதும் கோபம் கொள்வார்களா.? பாரதியையும் இந்து விரோதி என்பார்களா?
சொன்னாலும் சொல்வார்கள். சரி பாரதியை விடுங்கள். இவர்களின் தலைவர் மோடியும் இதே கருத்தைத்தானே சொன்னார். ஜோதிகாவாவது கோவில்களை விட பள்ளிகள் முக்கியம் என்றார். மோடி கோவில்களை விட கழிப்பறைகள் முக்கியம் என்றாரே. அவர் மீது ஏன் கோபம் கொள்ளவில்லை.
ஆக இவர்களுக்கு சொல்லும் பொருள் மீது அல்ல கோபமும், எதிர்ப்பும். சொல்லும் மனிதர்கள் மீதே கோபமும் வெறுப்பும்.
நடிகர் விஜய் சேதுபதி பேசியதற்கு கிளம்பிய எதிர்ப்பும் அப்படிப்பட்டதே. நடிகர் விஜயை பார்ப்பனர்கள் ஜோசப் விஜய் என்று மதம் சார்ந்து அவர் மீது வெறுப்பை கக்கி அவருக்கு இளைஞர்களிடம் இருக்கும் ஆதரவை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும்போது அந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியையும் இணைக்கிறார்கள். அவர் அதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியதும், அவர் இந்துக் கடவுகள்களை அவமதித்துவிட்டார் என்று ஓராண்டிற்கு முன் நடைபெற்ற நிகழ்வை எடுத்து வந்து அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்குகிறார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி பேசிய அதே கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகர் கிரேசி மோகன் பேசுகிறார். சாமி குளிக்கும்போது காட்டுறாங்க, டிரஸ் மாத்தம்போது மட்டும் ஏன் திரை போட்டு மறைக்கிறாங்க என்று கிரேசி மோகன் கேட்டபோது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு இருந்தவர்கள், விஜய் சேதுபதி கேட்டதற்கு அதுவும் ஓராண்டு கழித்து பொங்குகிறார்கள் என்றால் பிரச்னை அவர் கடவுள் குறித்து பேசியது அல்ல. அவர் கல்வி, நீட் என்று பொதுப்பிரச்னைகள் குறித்தும் கருத்து சொல்ல தொடங்கிவிட்டார் என்பதே.
ஆக இவர்களுக்கு சொல்லப்படும் கருத்துக்களின் மீது எப்போதுமே விமர்சனங்கள் இருப்பதில்லை. அதை யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களின் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும்.
இதற்கு மற்றுமொரு சான்றுதான் வைரமுத்து விவகாரம். ஆண்டாள் குறித்து வைரமுத்து தன் சொந்தக் கருத்தை வைத்ததுபோல் வெகுண்டெழுந்து கத்தியவர்கள் அனைவருக்குமே தெரியும் அது வைரமுத்துவின் கருத்தல்ல என்று. வைரமுத்து ஒரு ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார். அந்த ஆய்வுக் கட்டுரையில் , ஆண்டாள் தேவதாசி மரபைச் சேர்ந்தவளாக இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டிய வைரமுத்துவின் நாக்கையே வெட்ட வேண்டும் என்றெல்லாம் பேசினார்களே எனில், இந்தக்கட்டுரையை எழுதியவர்கள் கதி என்ன ஆகுமோ என்று நினைத்தால், ஒன்றுமே நடக்கவில்லை. கட்டுரையை எழுதியவர்களுக்கு எதிராக ஒரு கடுகளவு எதிர்ப்பு கூட வரவில்லை. காரணம் கட்டுரையை எழுதியவர் எம்.ஜி.எஸ்.நாராயணன் எனும் பார்ப்பனர். இந்த நாராயணன் ஒரு நூலை மேற்கோள் காட்டுகிறார். அதை எழுதியவர் டி.ஏ.கோபிநாத் ராவ். இவரும் ஒரு பார்ப்பனர். இதற்கெல்லாம் மேலாக, ஹேராம் திரைப்படத்தில் “ நீங்க என்னை ஆம்படையாளா ( பொண்டாட்டி ) ஏத்துக்கலை. ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ “ என்று வசனம் வந்ததே. அப்போது ஏன் கொந்தளிக்கவில்லை. வாலியே இதைச் சொல்கிறார். “திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்ததால் ஓடவில்லை. மதம் பிடிக்கவில்லை அதனால்தான் ஓடியது “ என்று தான் ஒரு கவிதை சொல்லியதாகவும் அதைப் பார்த்துவிட்டு கலைஞர் கருணாநிதி, இதையே நான் சொல்லியிருந்தால் “சோ” வென மழை கொட்டும் என்று கூறியதாகவும் சொல்கிறார் வாலி.
ஆக இங்கே பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி. மற்றவர்களுக்கு ஒரு நீதி.
நெல்லை கண்ணன் மீது வழக்கு போட்டு அவரை கைது செய்தார்களே. என்ன காரணம் அவர் அமித்ஷா, மோடி ஆகியோரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக பேசிவிட்டார் என்பது சொல்லப்பட்ட காரணம்தான். உண்மையான காரணம் அதே மேடையில் அவர் இந்து என்று ஒரு மதமே கிடையாது என்றும் தான் ஒரு இந்து அல்ல சைவன் என்றும் பேசுகிறார். அதுதான் பிரச்னை.
சரி அதற்காக அவர், மோடி, அமித்ஷா ஆகியோரின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சரியா என்று கேள்வி எழுப்பும் நண்பர்களிடம் நான் முன் வைக்கும் கேள்வி, வைரமுத்துவின் நாக்கை வெட்ட வேண்டும் என்று பாஜக வின் நயினார் நாகேந்திரன் பேசினாரே. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை. நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று ஒரு ஜீயர் பேசினாரே அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை. ரத்த ஆறு ஓடினாலும் பரவாயில்லை இதற்கு ஒரு முடிவு வரட்டும் இந்துக்கள் என்ன ஏமாளிகளா ? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்கமாக பேசினாரே அவர் ஏன் கைது செய்யப்படவில்லை.
ஆக, சட்டம் ஒழுங்கு சார்ந்த நடவடிக்கையே நெல்லை கண்ணன் கைது என்று சொல்வது ஏமாற்று வேலை என்பது அப்பட்டமாகிறது. பார்ப்பனீயத்தை உடைக்கும் விதமாக நெல்லை கண்ணன் பேசுகிறார் என்பதே அவரின் கைதுக்கு காரணம்.
பார்ப்பனர்களின் ஒட்டுமொத்த தலைவனாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் எஸ்.வி.சேகரிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நெறியாளர் செந்தில் ஒரு கேள்வியை முன் வைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார் உங்களின் குரு பீடம் அவரை யார் அவமதித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லும் நீங்கள் அவரை ஜெயலலிதா கைது செய்த போது அதிமுக எம்.எல்.ஏ. வாகத்தானே இருந்தீர்கள். அப்போது ஏன் அதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கலாமே. குறைந்தபட்சம் உங்கள் எம்.எல்.ஏ.பதவியையாவது ராஜினாமா செய்திருக்கலாமே என்று கேட்ட கேள்விக்கு பதிலே இன்றி விழித்தார் எஸ்.வி.சேகர். இவர் மட்டுமில்லை. இன்று வைரமுத்துவின் நாக்கை வெட்டுவேன் என்று கொக்கரிக்கும் நயினார் நாகேந்திரன் அப்போது அதிமுகவில்தானே இருந்தார். இந்து சமய மடாதிபதியை கைது செய்த ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லையே ஏன். இப்போது நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று வீர வசனம் பேசும் ஜீயர் அப்போது எங்கிருந்தார் என்றே யாருக்கும் தெரியாதே.
காரணம் ஜெயேந்திரரை கைது செய்தது ஜெயலலிதா எனும் பார்ப்பனர். இதுவே கலைஞர் ஆட்சியில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருந்தால் திமுக வும் கலைஞரும் இந்து விரோதிகளாக குற்றம்சாட்டப்பட்டு பார்ப்பனர்கள் அனைவரும் பொங்கி எழுந்திருப்பார்கள்.
பார்ப்பனர் என்ற வார்த்தையைச் சொன்னாலே கோபம் வருகிறது. அவர்களுக்கு.
பார்ப்பனர் என்ற வார்த்தை திருக்குறளில் இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. அம்பேத்கர் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சிக்கிறார். பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாரதி பாடுகிறான். இவர்கள் மீதெல்லாம் கோபம் கொள்வார்களா பார்ப்பனர்கள்.
மாட்டார்கள் மாறாக அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் பார்ப்பனர்களைப் பற்றி பேசிய கருத்துக்களை மேற்கோள் காட்டினாலோ, திருக்குறளில், சிலப்பதிகாரத்தில் பார்ப்பனர் என்ற வார்த்தைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினாலோ, அம்பேத்கர் பேசியிருக்கிறார் என்பதை நினைவுபடுத்தினாலோ அவர்களுக்கு பற்றி எரிகிறது. என்ன செய்வது.
ஆண்டாண்டு காலமாய் பார்ப்பனீயம் செய்து வரும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துபவர்களை இந்து விரோதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் சாதிய, மத, சட்ட ரீதியிலான மிரட்டல்கள் மூலமாகவெல்லாம் அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் உங்களின் முயற்சிகள் வேறெங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் அது ஒருக்காலமும் வெல்லாது. பார்ப்பனீயத்தால் தமிழ் மண்ணில் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.