1928ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதி பேகம் பள்ளிவாசல் முன்பு முதல் மீலாதுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றியவர் தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்.‘நபிகள் நாயகத்திற்குப் பிறந்தநாள் விழாவா?’என்ற கேள்வி முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே அப்போது எழுந்ததாகவும், அதற்குத் தாம் பதிலளித்ததாகவும் 1973 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த அகில இந்திய மீலாதுவிழாவில் பேசும்போது கி.ஆ.பெ குறிப்பிடுகின்றார்.
அந்த வினா இன்றும் எழுப்பப்படுவதற்குக் காரணம் நபிகளாரின் பிறந்ததினத்தைக் கொண்டாடும்படியான வழிமுறையை நபிகளார் தம் காலத்தில் காட்டிவிட்டுச் செல்லவில்லை. தம்மைப் பின்பற்றி நடக்குமாறு சொன்ன நபிகள் தம்மைக் கொண்டாட வேண்டுமென்று சொல்லவில்லை. ‘நாளை நடப்பதை அறிபவரே..!’என்று நபிகளார் குறித்து தோழர் ஒருவர் புகழ்ந்து கூறும்போது நபி(ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். தம்மை இவ்வாறு வரம்புமீறிப் புகழக்கூடாது என்று கண்டித்தார்கள். நபிகளாரின் அசைவுகளைக் கூட அட்சரம் பிசாகாமல் கடைப்பிடித்தொழுகிய நபித்தோழர்கள் நபிகளாரின் காலத்திலோ அவர்களின் மறைவுக்குப் பின்னரோ நபியின் பிறந்தநாளுக்கான எந்த முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை. எனவேதான் பிற்காலத்தில் முஸ்லில் சமுதாயத்தில் நடைபெற்று வந்த மெளலூது எனும் புகழ்பாக்கள் நூதனவழிமுறையாக விமர்சிக்கப்பட்டது.
ஆரவாரம், கொண்டாட்டம், அளவுகடந்த புகழ்பாடல் என்ற அளவில் மீலாது எனும் பிறந்தநாள் விழாக்கள் நடைபெறுவதால் எந்தவித பயனும் இல்லை. அதேவேளையில் இந்தியா போன்ற பன்மைச் சூழலில் நபிகளாரின் பிறந்தநாள் சமயங்கள் குறித்த உரையாடலுக்கான களமாக அமைய வேண்டும் என்ற ஒரு கருத்தும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களிடையே எழுந்தது. அந்த கருத்துருவாக்கத்தின் செயல்வடிவமாகவே தமிழகத்தில் மீலாது விழாக்கள் 1920ஆம் ஆண்டு முதலே முன்னெடுக்கப்பட்டது.
கடவுள் மறுப்புக் கொள்கை பேசிய பெரியார் மீலாது கூட்டங்களில் மகிழ்வுடன் கலந்து உரையாற்றினார். ஈரோடு நகரசபை தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பெரியார், சாதி முறைகளால் இன்னலுறுபவர்களையும், அவமானப்படுத்துகிறவர்களையும் தங்களோடு சேர்த்துக் கொண்டு, தாங்கள் அனுபவிக்கும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அவர்களுக்கும் அளிக்கும்படி முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டார்.‘தாம் இஸ்லாத்தின் சகோதர உணர்வால்தான் முஸ்லிம்களின் விழாக்களுக்கு அழைக்கப்படுவதாகவும், தாம் இந்துப் பண்டிகைகளுக்கு அழைக்கப்படாமை வெட்ககரமான விஷயம்’என்றும் கூறினார்.
பேரறிஞர் அண்ணாவும் மீலாது கூட்டங்களில் உவகையோடு கலந்து கொண்டு உரையாற்றினார். ‘பொதுவாழ்வில் எனக்குச் சலிப்பு ஏற்படுகின்றபோதெல்லாம் இரண்டு மேடைகளில் என்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறேன். ஒன்று மீலாது மேடை, மற்றொன்று இலக்கிய மேடை’என்கிறார் அண்ணா. கருணாநிதி அண்ணாவை முதன்முதலாகச் சந்தித்தது திருவாரூர் மீலாது மேடையில்தான்.
திராவிட இயக்கத்தில் மீலாது பேச்சாளர்கள் நிறைந்திருந்தார்கள். முஸ்லிம் வாக்குகளை மையப்படுத்தியே மீலாது மேடைகளில் வாய்பந்தல் விரிப்பதான விமர்சமனங்கள் எழுந்தன. கடவுள் மறுப்புக் கொள்கை பேசியவர்கள் மீலாது மேடைகளில் பேசுவது எவ்வகை நியாயம்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. மீலாது விழாக்களில் திராவிட இயக்கத்தினர் கலந்து கொண்டதற்கு ஆன்மிகக் காரணங்களை விட அரசியல், சமூகக் காரணங்கள்தான் அதிகம்.
1949ஆம் ஆண்டு தி.மு.கழகம் தொடங்கிய பொழுது, கழகத்தின் இறைக்கொள்கைகளுக்கு விளக்கமளித்த அண்ணா ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’என்று கூறினார். இஸ்லாத்தின் கொள்கைக்கு நெருக்கமான இந்த முழக்கத்தையே மீலாது மேடைகள் பிரதிபலித்தன. மூடநம்பிக்கை, சாதிமறுப்பு, தமிழ் மொழித் தொண்டு போன்ற ஒத்திசைவான கருத்தியல்கள் திராவிட இயக்கம் பாசாங்கற்று மீலாது மேடையேற உதவின.‘திராவிட இயக்கத்திற்கும், தமிழக முஸ்லீம்களுக்குமான உறவு இயல்பானது மட்டுமல்ல; வலிமையானது. இந்த உறவு உலக இஸ்லாமிய வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்தது’என்று குறிப்பிடுகிறார் வரலாற்றறிஞர் ஜே.பி.பி.மோரே
நபிகள் நாயகம் முஸ்லிம்களுக்கான மதத்தலைவராக மட்டுமே இருக்கவில்லை. உலக மக்கள் அனைவருக்குமான வழிகாட்டியாகத் திகழ்ந்த இறைவனின் தூதர். சாதி ஒழிப்பு, அடிமை விடுதலை, பெண் உரிமை, மது, இலஞ்சம், வட்டி போன்ற பெருந்தீமைகள் அகற்றம் போன்றவற்றை பரப்புரை செய்ததோடு மட்டுமின்றி தம்வாழ்காலத்திலேயே அவற்றைச் சாத்தியப்படுத்திக் காட்டிய புரட்சியாளர் நபிகளார். அமைதியும், நீதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டமைத்த மனித உரிமைக் காவலர் நபிகளார். சொந்த மக்களால் விரட்டப்பட்ட போதும் 23 ஆண்டுகாலத்திலேயே தம்மை எதிர்த்தவர்களையே தம்மவர்களாக மாற்றிக்காட்டி பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய சக்கரவர்த்தியாகவும் நபிகளார் திகழ்ந்தார்கள். தம்மை அழிக்கவந்த எதிரிகளை நேர்கொண்டு எதிர்த்து சமராடிய வீரம் செறிந்த வெற்றித்திருமகன் அண்ணல் நபிகளார். ஆன்மிகம், அரசியல், இல்லறம், பொருளாதாரம், வணிகம், கல்வி என வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வாழ்வியல் வழிகாட்டியாக வாழ்ந்த, காலம் முழுவதும் கடைப்பிடித்தொழுக வேண்டிய பின்பற்றத்தகுந்த முன்மாதிரி நபிகள் நாயகம். நாயகத்தின் முன்மாதிரி இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசுவது என்பது மதம் சார்ந்த உரையாடல் மட்டுமல்ல. உலகச் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த சித்தாந்தத்தை நிலைநாட்டிய மகத்தான ஆளுமையின் மீதான விசாரணை.
அதனால்தான் திராவிட இயக்கம் தாண்டியும் பல்வேறு ஆளுமைகள் மீலாது மேடைகளில் நாவாடிவந்தனர். 22.10.1989 ஆம் நாள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வேலூர் கிளை நடத்திய மீலாது பெருவிழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் நபிகளாரைக் குறித்து ஆற்றிய உரை ‘என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்)’எனும் நூலாக வெளிவந்து பெரும் கவனத்திற்கு உள்ளானது. சகோதர சமுதாய ஆளுமைகள் இஸ்லாம் குறித்த தங்களது கருத்துகளைச் சொல்வதற்கான தளமாக மீலாது மேடை பயன்பட்டதுடன் சமய நல்லிணக்க விழாவாகவும், இதயங்களை இணைக்கின்ற புள்ளியாகவும் அமைந்தது.
இன்று திருச்சி சிவா, கம்பம் செல்வேந்திரன் என்று விரல்விட்டு எண்ணும் மீலாது பேச்சாளர்களே கழகத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கான மேடைகளும் இல்லை. இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் மிக மோசமான சித்திரிப்புகளை உடைத்து எதார்த்தத்தை எடுத்தியம்பும் இந்த மேடைகளை இஸ்லாமிய சமுதாயமும் முன்புபோல் முன்னெடுப்பதில்லை. இந்தத் தலைமுறை இடைவெளி சமயங்களுக்கான இடைவெளியாகவும் விரிகின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது பன்மைச் சமூகத்தின் ஆகச்சிறந்த கூறுகளில் ஒன்று. அதனைக் கட்டியெழுப்பும் மேடைகளில் ஒன்றுதான் இந்த மீலாது மேடைகள். வகுப்புவெறியும், வெறுப்புப் பரப்புரையும் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் மதங்களுக்கிடையேயான உரையாடல் மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் மீலாது விழாக்கள் இன்றைய காலத்தின் பெரும்தேவையாக இருக்கிறது.