மதராஸ் – மண்ணும் , கதைகளும் -21

எம்.சி.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் வயது நூற்று எண்பத்தைந்து வருடங்கள். ஆசியாவின் பழமையான கல்லூரிகளில் ஒன்று. 1835 ஆம் வருடம் எழும்பூர் ரயில்வே நிலையம் பின்புறமிருந்த புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் சிறிய பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.

ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயம் சார்பாக  இங்கு வந்த ஜான் ஆண்டர்சன் மூலம் ‘ஜெனரல் அசெம்பிளி பள்ளி’ என்ற பெயரில் அதை தொடங்கினார். பிறகு அந்தப்பள்ளி ஆர்மீனியன் தெருவுக்கு இடம்மாறிச்சென்றது. பிறகு அது மதராஸ் கிறிஸ்தவப் பள்ளியாக மாறியது. 1937-ஆம் வருடம்  தாம்பரத்துக்கு இடம்மாறியது. அப்போது தாம்பரமெல்லாம் சென்னையில் இல்லை. அது ஒரு சிறுகிராமம். அதுவும் தாம்பரம் கிழக்குப்பகுதியெல்லாம் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்து. காட்டின் நடுவே அந்தக்கல்லூரியை நிறுவினார்கள்.   தாம்பரம் ரயில்வே நிலையத்தின் கிழக்கு படிக்கட்டுகள் வழியாக இறங்கிப்பார்த்தால் இந்தக்கல்லூரி தெரியும். இன்றுவரை  அந்தக்கல்லூரி அங்குதான்  இயங்கிவருகிறது.

சென்னையின் பல பிரிட்டிஷ் கட்டிடங்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அதை வடிவமைத்தவர் மைக்கேல் டாப்பிங் என்ற சர்வேயராக இருப்பார். சென்னை வானிலை மையத்தை வடிவமைத்தவரும் இவரே. 1794-ஆம் ஆண்டி இவர் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே சர்வே பயிற்சி கொடுக்கும் ஒரு பள்ளியை தொடங்குகிறார். வெறும் எட்டு மாணவர்களுடன் அந்தப்பள்ளிக்கூடம் தொடங்கப்படுகிறது. சென்னையின் பழமையான கல்லூரிகள் எல்லாமே முதலில் சிறு பாடசாலைகளாக பத்து இருபது மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டதே. பிறகுதான் அந்த பள்ளிக்கூடங்கள் எல்லாம் பெரிய கல்லூரிகளாக உருமாறின.   இந்த நிலஅளவை பள்ளிக்கூடம் 1858-ஆம் வருடம்  அது பொறியியல் பள்ளியாக மாற்றமடைகிறது. 1861-ஆம் வருடம் இயந்திரப் பொறியியல் படிப்பை அதில் சொல்லித்தருகிறார்கள். தொழிற்புரட்சி நடந்து குதிரைகள், மாடுகள் பயன்பாடுகள் குறைந்து  எந்திரங்கள் பெருகிய காலம் அது. புதுப்புது எந்திரங்களின் கண்டுபிடிப்பு , அவற்றை  பழுதுபார்க்கும் ஆட்களின் தேவை அதிகரித்தது.  பிறகு அது முழுமையான  பொறியியல் கல்லூரியாக மாறியது.  அந்த கல்லூரிதான் இப்போது கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ளது.

சென்னையில் மூன்று நூற்றாண்டுகளைத்தாண்டி ஒரு பள்ளி இன்றும் இயங்கிவருகிறது. முந்நூற்று ஐந்து ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிக்கு  இந்தியாவின் பழைய பள்ளிக்கூடம் என்ற பெருமை மட்டுமல்ல  ஆசியாவின் மிகவும் பழமையான ஆங்கில வழிப் பள்ளிகளில் ஒன்று என்ற பெருமையும் உண்டு. 1715-ஆம் வருடம் வில்லியம் ஸ்டீவன்சன் என்ற பாதிரியார் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலய சார்பாக ஓர் இலவசப் பள்ளியைத் தொடங்கினார். புனித மேரி தேவாலயத்தொண்டுப் பள்ளி என்ற பெயரில் அது தொடங்கப்பட்டது. வெறும் முப்பது மாணவர்களோடு  அந்தப்பள்ளி தொடங்கப்பட்டது. 1872-ஆம் வருடம் அந்தப்பள்ளி எழும்பூர் ரயில் நிலையம் அருகில் இடம்மாறியது. பிறகு 1904-ஆம் வருடம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருபது ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. இன்றும் அதே இடத்தில் செயின்ட் ஜார்ஜ் பள்ளி என்ற பெயரில் அது இயங்கிவருகிறது.

1914-ஆம் வருடம்  பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி ‘மகளிர் கல்லூரி மதராஸ்’ பின்னர் ராணி மேரிக் கல்லூரி என்று பெயர் மாறியது. கடற்கரைச்சாலையில் காப்பர் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட இடத்தில் வெறும் முப்பத்தேழு மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி 1917-ல் ராணி மேரிக் கல்லூரியாக  ஆனது. இந்தியாவின்  மூன்றாவது பெண்கள் கல்லூரி மற்றும்  தென்னிந்தியாவின் இரண்டாவது பெண்கள் கல்லூரி என்ற பெருமையும் இந்தக்கல்லூரிக்கு உண்டு. இந்தக் கல்லூரியை நிறுவியர் டோரதி தி லா ஹே. இவரது சகோதரர்தான்  தி லா ஹே. தேனாம்பேட்டையில் இயங்கிவந்த  ஜமீன் பள்ளிக்கூடத்தின் முதல்வராக இருந்தவர். இவர் கல்லூரி வளாகத்தினுள் படுகொலை செய்யப்பட்டார்.  அப்போது பிரசித்தமாக பேசப்பட்ட அந்த கொலைவழக்கில் சிங்கம்பட்டி ஜமீன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு நடந்து பிறகு விடுவிக்கப்பட்டார்.  குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்கப்படாத சில வழக்குகளில் இதுவும் ஒன்று. ராணி மேரிக் கல்லூரியில் 1936-ஆம் வருடம் வரை டோரதி தி லா ஹே கல்லூரி முதல்வராக செயல்பட்டார்.

சென்னை மருத்துவக்கல்லூரிக்கு வயது நூற்று எண்பத்தைந்து. 1665 ஆம் வருடம். அப்போது ஆங்கிலயேர்களுக்கும், பிரஞ்ச்காரர்களுக்கும் நடந்த சண்டையில் தொடர்ந்து படுகாயமடைந்த வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஜார்ஜ் கோட்டையில் சிறு   மருத்துவமனையொன்று உருவாக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் சேரும் இளம்மருத்துவர்களுக்குப் பயிற்சியளிக்க 1835-ஆம் வருடம் ஒரு மருத்துவப் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது. முதலில் ஆங்கிலயேர்கள் மட்டுமே இந்த பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். 1842- ஆம் வருடத்திலிருந்து இந்தியர்களும் அனுமதிக்கப்பட்டனர். 1850-ஆம் வருடம் இந்த பள்ளி  மருத்துவக்கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது. மதராஸ் மருத்துவக்கல்லூரி என்ற பெயரில் இந்த கல்லூரி விரிவடைய 1857-ஆம் வருடம் மதராஸ்  பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றது. இந்தக்கல்லூரியில்தான் உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மேரி சார்லலெப் 1878ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி இங்குதான் மருத்துவம் பயின்றார்.

1854ம் வருடம் சார்லஸ் உட் பரிந்துரைத்த  கல்விக்குறிப்பின் பயனாக, 1855ம் ஆண்டு மதராஸ் அரசு ஒரு தனியார் கல்வித்துறையை உருவாக்கியது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில்தான் இந்தியாவின் மூன்று மாநகர்களில் மூன்று பெரிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. 1857-ஆம் ஆண்டு ஜனவரியில் கொல்கத்தா பல்கலைக்கழகம், ஜூலையில் மும்பை பல்கலைக்கழகம், செப்டம்பரில்  சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டன.  1858ம் வருடம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தியவர் சென்னை மாகாண ஆளுனராக இருந்த அலெக்சாண்டர் அர்புத் நாட். சென்னை மாகாண பொதுக் கல்வித்துறையைச் சீர்படுத்தியதிலும்,  சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதிலும் பெரும்பங்கு வகித்தவர் இவர்.   ஆக்ஸ்போர்டு அகராதிகள் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர்.    1956ம் ஆண்டு வருடம் சென்னை தனி மாநிலமாக உருவாகும்வரை தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தையே நம்பி இருந்தார்கள்.  இந்த பல்கலைக்கழகத்தின் துணைக்கல்வி நிறுவனங்களாக  மைசூர் பல்கலைக்கழகம் ,  உஸ்மானியா பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம் ,  திருவாங்கூர் பல்கலைக்கழகம், ஒடிசாவின் உத்கல் பல்கலைக்கழகம், திருவேங்கடவன் பல்கலைக்கழகம் இருந்தன. சுதந்திரத்துக்குப்பிறகு தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபிறகு இவை அந்தந்த மாநில கட்டுப்பாட்டின்கீழ் சென்றன.  இந்த பல்கலைக்கழகத்த்தின் துணைவேந்தர்களாக முதலில் ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் துணைவேந்தர்கள் பதவிக்கு மெல்ல வரத்தொடங்கினார்கள்.

பிரெசிடென்சி கல்லூரி 1840-ஆம் வருடம்  மெட்ராஸ் உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில்  நிறுவப்பட்டது. பிறகு அது கல்லூரியாக மாறியது.  முப்பதாண்டுகள் கழித்து அது சென்னை கடற்கரை எதிரே இப்போதிருக்கும் இடத்துக்கு மாறியது.   இந்த கல்லூரியைப்பற்றி ஒரு சுவையான செய்தியும் கடந்தாண்டு வெளிவந்தது. நூற்று எண்பது வருடங்கள் பழமையான இந்துக்கல்லூரியில் கடந்தாண்டு பராமரிப்புப்பணிகள் நடந்தபோது ரகசிய சுரங்கப்பாதையொன்று கன்டுபிடிக்கப்பட்டது. உடனே தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சுரங்கத்தை பார்வையிட்டார்கள். ஆனால் சுரங்கத்தில் மதிப்புமிகுந்த பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. ஒருவேளை கடற்கரையையொட்டி இருந்ததால் பிரிட்டிஷார் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சுரங்கத்தை கட்டியிருக்கலாம். மற்றபடி அந்த சுரங்கத்தைப்பற்றி மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்தியாவின் முதல் கால்நடை மருத்துவப்படிப்பும் சென்னையில்தான் தொடங்கப்பட்டது. சைதாப்பேட்டையில் அடையாற்றின் கரையில் அமைந்திருந்த வேளாண் கல்லூரியில் 1876-ஆம் வருடம் முதன்முதலாக இரண்டாண்டு கால்நடை அறிவியல் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் அது முழுமையான கால்நடை மருத்துவ கல்லூரியாக இல்லை. 1902-ஆம் வருடம்  பிரிட்டிஷ் அரசின் கால்நடைத்துறை  கண்காணிப்பாளராக இருந்த மேஜர் டபுள்யூ.டி. கன் இதுபோன்ற ஒரு கல்லூரி தொடங்கும் முன்வரைவை சமர்ப்பித்து அனுமதி வாங்கினார். எந்திர வாகனங்கள் அறிமுகமாகாத அந்தக்காலட்டத்தில் குதிரைவண்டிகளும். மாட்டுவண்டிகளும்  அதிகம் புழக்கத்தில் இருந்தன. தவிர போர்களில் காயமடையும் குதிரைகளை பரமாரிக்கும் தேவையும் அதிகம் இருந்ததால் கால்நடை மருத்துவமனையின் தேவையும் அதற்கென்று பிரத்யேகமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தேவையும் இருந்தது.  தொடங்கப்பட்ட புதிதில் வேப்பேரியிலிருந்த டாபின் ஹால் என்ற பங்களாவை மாதவாடகைக்கு எடுத்து அதில் கால்நடை மருத்துவத்தை கற்றுக்கொடுத்தார்கள். 1904-ஆம் வருடம் டாபின் ஹாலின் முகப்பில்  இந்தக் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை கட்டினார்கள். அப்போது வெறும் இருபது மாணவர்கள்தான் அங்கு பயிற்சி பெற்றார்கள்.  1930-ல் ராயல் கமிஷன் இந்த கால்நடை மருத்துவக்கல்லூரி பட்டயப்படிப்புகளை, பட்டப்படிப்பாக மாற்றப் பரிந்துரைத்தது.

எல்லா உற்பத்திக்கும் பின்னாலும் ஒரு தேவை இருக்கும். அப்படித்தான் பிரிட்டிஷ் காலத்தில் நவீனக்கல்வியின் தேவையும் எழுந்தது. உதாரணமாக உள்நாட்டு மன்னர்களின், பிரெஞ்ச் ஆட்சியாளர்களின் படையெடுப்பின்போதும் , வர்த்தகத்தின்பொருட்டும் அவர்கள் இந்த நிலத்தை அங்குலம் அங்குலமாக அளந்து மேப்பை தயாரித்தார்கள். எனவே நிலஅளவை பள்ளியை உருவாக்கினார்கள். நிலஅளவை பள்ளியோடு இணைந்து  வானிலை படிப்பும் வளர்கிறது. அதுபோல பிரிட்டிஷார்  போக்குவரத்துக்கு பயன்படுத்தும் குதிரைகளுக்கும் மாடுகளுக்கும் தவிர அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்தும்  நாய்களுக்கு ஏற்படும் நோயை தீர்க்க கால்நடை மருத்துவக்கல்லூரியை உருவாக்குகிறார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்காக மருத்துவப்பள்ளியை தொடங்குகிறார்கள். எந்திரங்கள் வளரவளர பொறியியல் கல்லூரியை திறக்கிறார்கள். அப்படித்தான் சென்னை மாகாணத்தில் நவீன ஆங்கிலேயக்கல்வி பரவியது.

1854-ஆம் ஆண்டு சர் சார்லஸ் உட் சமர்ப்பித்த கல்வி அறிக்கை மெக்காலே  தவறுகளைச் சரி செய்யும் நோக்கில் அமைந்தது. இந்தியர் அனைவருக்கும் ஜாதி மத பாகுபாடு இல்லாமல்  நவீனக்கல்வியை வழங்குவது  அரசின் கடமையென்று அது வலியுறுத்தியது. ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்ற நவீன அறிவியலும், தத்துவக் கோட்பாடுகளும், கலைப்பாடங்களும் இந்தியருக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதேநேரம் இந்தியர்களின் தனித்த இந்திய மொழிகளையும் தொடர்ந்து கற்றுத்தரவேண்டுமென்று அந்த அறிக்கை வலியுறுத்தியது. இந்தியாவில் இருந்தவர்கள் கல்வியில் பின்தங்கி இருக்கவில்லை. உலகின் தொன்மையான பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் எல்லாம் இங்கிருந்தன. ஆனால் பிற்காலத்தில் இது மிகவும் மறைந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கல்விகற்கும் நிலைமை மாறியது. கிழக்கிந்திய நிறுவனம் வந்தபிறகு இந்தியர்களை அடிமைகளைபோலவே நடத்தினார்கள். மெக்காலே கல்விமுறை இந்தியர்களும் கல்விக்கற்கலாம். ஆனால் அது   ஆங்கிலேயர்களின் நலனுக்கு மட்டுமே என்று வலியுறுத்தியது. பின்னாட்களில் இது மெல்ல மெல்ல மாறியது. சுதந்திரத்துக்கு அடுத்த ஆண்டே நேரு அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை அழைத்து இந்தியாவின் நவீன கல்விக்கொள்கையை ஆராயச்சொன்னார். அதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு என்று பெயர். அம்பேத்கார் சொன்னார். பிரச்சினை இந்த கல்வி முறையில்  இல்லை. எல்லாருக்கும் ஆரம்பக்கல்வி கிடைப்பதில்தான் பிரச்சினை என்கிறார்.  பிறகு நிறுவப்பட்ட டாக்டர் லட்சுமணசாமி குழுவில்  பெரியார், ஜி.டி.நாயுடு போன்றோர் இடம்பெற்று நவீனக்கல்வி குறித்து விவாதித்தார்கள். பெண்கல்வி மேம்பாடு பற்றி பலவிஷயங்களை விவாதித்து கொண்டுவந்தார்கள்.

இதையெல்லாம் எதற்கு இங்கு குறிப்பிட வேண்டியுள்ளதால் இந்தியா முழுமைக்குமான நவீனக்கல்விக்கொள்கையை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட இந்த எல்லா குழுக்களிலும் தமிழர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாதளவு சென்னையில்தான் அதிகளவு கல்வியாளர்கள் உருவாகிவந்தார்கள். நவீனக்கல்வியின் பிறப்பிடம் என்று சென்னையை குறிப்பிடலாம்.  பிரிட்டிஷ் அரசில் இங்கு நிறுவப்பட்ட பள்ளிகள் , கல்லூரிகளே அதற்குச்சான்று. சென்னையின் பழமையான இந்த கட்டிடங்கள் எல்லாமே இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டவை. சிவப்பு கற்களால் உருவாக்கப்பட்டவை. தூண்களும், குவிமாடங்களுமாக அரண்மனைகள்போல வடிவமைக்கப்பட்டவை. இருநூறு ஆண்டுகளை நெருங்கும் இந்தக்கட்டிடங்கள் எல்லாம் இன்றும் சென்னையின் வரலாற்றை சுமந்து கம்பீரமாக நிற்கின்றன.