நாம், அன்றாடம் சில செய்திகளைக் கேட்டும் பார்த்தும் வருகின்றோம். அச்செய்திகளில், சாக்கடைக்குழிக்குள் இறங்கி விஷவாயுத் தாக்கி உயிரிழப்பு என்ற செய்தியை நாம் கேட்காமல் இருந்ததில்லை. அப்படி இன்று(27.05.2019) தஞ்சாவூரில் பாதாளச் சாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் சுத்தம் செய்ய சென்ற பெண் விஷவாயு தாக்கி உயிரிழந்ததுள்ளார் என்ற செய்தியை கேட்கும் பொழுது பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், இதை அரசு வேலை என்றே இப்பணியில் ஈடுப்படுபவர்கள் நினைக்கின்றனர். ஆனால், மனித கழிவுகள் அள்ளுவது உண்மையிலேயே அரசு வேலையா? என்ற கேள்வி என்பது இவர்கள் மனதில் எழுமா? எழாதா? என்பதே கேள்விக்குறி. ஏனென்றால், கழிவுகள் அள்ளுவதன் மூலம் அதாவது சாக்கடையைச் சுத்திகரிப்பதால் கிடைக்கும் பணமே இவர்களின் அன்றாட வருமானமாக இருந்து வருகின்றது. இவர்கள் பொதுவாக சமூக நிர்பந்தங்களால் தாங்களாக இந்தப் பணியில் ஈடுபடுவதும் மற்றும் அரசாங்கத்தில் ஒப்பந்தம் எடுத்த நபர்களால் பணி அமர்த்தப்படுவதும் என இரண்டு விதமாக இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்தில் ஒப்பந்தம் பெறும் நபர்களால் பணியமர்த்தப்படுபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே இதில் ஈடுப்படுகுன்றனர். இவர்கள் அரசாங்க ஒப்பந்தக்காரர்களால் பணியமர்த்தப்பட்டாலும் இவர்களுக்கான எந்த ஒரு மருத்துவ உதவியும் அளிக்கப்படுவது இல்லை. இவர்களிடம் இது அரசாங்க பணியும் இல்லை, அரசாங்க பணியில் கிடைக்கும் எந்த ஒரு நலனும் இதில் கிடைக்கவும் கிடைக்காது, இது வெறும் ஒரு தினக்கூலி வேலை மட்டுமே என்றும் தெளிவாக சொல்லப்படுவதும் இல்லை, யாரும் அதை அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முன்வருவதும் இல்லை.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான உரிமைகள் குறித்து பணியாற்றும் ‘சஃபாயி கர்மசாரி அந்தோலன்’ என்னும் அமைப்பானது, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது” என்று கூறுகிறது. மேலும், இந்த வருடத்தில்(2019) மட்டுமே தமிழ்நாட்டில் இதுவரை 12 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டு இறந்துள்ளனர். அதாவது வெறும் நான்கு மாதங்களில்(ஜனவரி-ஏப்ரல்) மட்டும் என்கிறது இந்த அமைப்பு. இது உயிருக்கே ஆபத்தான ஒரு பணி என்று தெரிந்துதான் பலரும் இதை செய்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் இதை விருப்பத்தோடு செய்வதில்லை. என்றாவது ஒரு நாள் தங்களுக்கு மாற்று வழி ஏற்படும் என்றே இவர்கள் நம்புகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சாதிரீதியான கொடுமை என்கின்றனர் செயற்பாட்டாளர்கள். தமிழ்நாடு சஃபாயி கரம்சாரி அந்தோலன் அமைப்பின் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 1993 – 2017ஆம் ஆண்டு வரை 251 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2013ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதைத் தடைசெய்யும் சட்டம் அதில் ஈடுபவர்களுக்கு முறையான மாற்று தொழில்களை அமைத்து தரப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசாங்க உதவியும் கிடைக்கவில்லை என்று இவர்கள் புலம்பி வருகின்றனர். கிட்டத்தட்ட இவர்கள் யாருக்கும் அரசு உதவித்தொகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், விஷவாயு தாக்கி உயிரிழந்தால் கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை பெறுவதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது சட்டப்படி குற்றம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் மரியாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன என்கிறது சட்டம். ஆனால் இதுகுறித்து அங்கங்கு சில விழிப்புணர்வு இருந்தாலும் பெரும்பாலும் இது நடைமுறையில் இல்லை என்பதே நிதர்சனம்.