கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்மையான காரணத்தைச் சொல்லி விடுமுறை விண்ணப்பம் எழுதிய சிறுவனுக்கு சமூக வலைதளங்கள் எங்கும் குவிந்த பாராட்டைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் சைக்கிள்களை மீட்டுத் தரக் கோரி போலீஸ் நிலையத்தில் 10 வயது சிறுவன் கொடுத்த புகார் விவரம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அபின், அங்குள்ள விளாயட்டூர் இளம்பிலாட் எல்.பி. என்னும் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தன்னுடைய சைக்கிளைப் பழுதுபார்ப்பதற்காக சைக்கிள் கடை ஒன்றில் சைக்கிளை ஒப்படைத்திருக்கிறார். சில நாட்கள் கழிந்தும் சைக்கிள் கடைக்காரர் அவரது சைக்கிளை அவரிடம் ஒப்படைக்காததைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி போலீஸ் நிலையத்துக்குச் சென்ற அபின், தன்னுடைய சைக்கிளை மீட்டுத்தாருங்கள் என போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதுவும் பள்ளிக்கூட நோட்டுப் புத்தகத்தில் இருந்த தாளில் தனது கைப்பட மலையாளத்தில் எழுதி புகாராக அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அபின் கூறி யுள்ளதாவது: “கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பழுதுபார்ப்பதற்காக சைக்கிள் கடையில் என்னுடைய மற்றும் என்னுடைய சகோதரனின் சைக்கிள்களைக் கொடுத்தோம். ரிப்பேர் செலவுக்காக ரூ.200ஐ கடைக்காரர் வாங்கிக்கொண்டார். ஆனால், இதுவரை சைக்கிள்களைத் திருப்பித் தரவில்லை. சைக்கிள் குறித்துக் கேட்பதற்காக போன் செய்தால் அவர் போனை எடுப்பதில்லை. எத்தனை முறை போன் செய்தாலும் அவர் எடுக்கவேயில்லை. நேரில் சென்று பார்க்கும்போது கடை பூட்டியே இருக்கிறது. அவரது வீட்டுக்குச் சென்றால் அங்கும் யாரும் இல்லை. தயவு செய்து எங்களுடைய சைக்கிளை மீட்டுத்தாருங்கள்.” இவ்வாறு அதில் அபின் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேப்பையூர் காவல் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: “இந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடமிருந்து அடிக்கடி ஏதாவது புகார்கள் வருவது வழக்கம். ஆனால், இந்த பத்து வயது சிறுவனின் புகார் கொஞ்சம் வித்தியாசமானது. அந்தச் சிறுவன், தனியாக போலீஸ் நிலையம் வந்து, நோட்டுப் புத்தகத்தாளில் புகாரை அளித்தான். மாணவனின் புகாரையடுத்து, அந்த சைக்கிள் கடைக்காரரைத் தொடர்புகொண்டோம். சைக்கிள் கடைக்காரருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், சில நாள்களாக கடையைத் திறக்கவில்லை என்றும் இதற்கிடையில் மகனின் திருமணம் நடந்ததால் அந்த வேலைகளுக்கே நேரம் சரியாக இருந்தது. விரைவில் சைக்கிளை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை சிறுவனிடம் தெரிவித்துவிட்டோம். விரைவில் சிறுவனுக்கு சைக்கிள் கிடைக்கும். ” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்த இரு தொடர் சம்பவங்கள் மூலம் சிறுவர்கள் தங்கள் கற்கும் கல்விமுறையிலிருந்து நீதியையும் நேர்மையை வளர்த்துக்கொள்வதாகப்பட்டாலும் சிறுவர்களுக்கே உண்டான குறும்புகளும் அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகளும் ஆச்சரியமூட்டுவதாகவே உள்ளது.