தமிழகத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் ரகுபதி. இவர் சிந்தாதிரி பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பு வீட்டில் வீடு ஒதுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், ஒதுக்கீடு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், டி.ஜி.பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே காவலர்களிக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாகக் குடியிருப்போரை அகற்ற வேண்டும் எனவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் வீடுகளை ஒதுக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.
மேலும், சட்டவிரோதமாகக் காவலர் குடியிருப்புகளில் வசிப்போருக்கு எதிராகப் புகார்கள் வந்தால், அவற்றின் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.