கீழடியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் 5ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 2015ஆம் ஆண்டு தொல்லியல் துறை அகழாய்வைத் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளதாக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2ஆம் கட்ட மற்றும் 3ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 18 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற்றது. இதைதொடர்ந்து 5ஆம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

முதல் கட்டமாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு கட்ட அகழாய்விலும் 12 மீட்டர் ஆழத்திற்குப் பின்தான் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் தற்போது 5ஆம் கட்ட அகழாய்வில் 5 மீட்டர் ஆழத்திலேயே மண் ஓடுகள், மண் பானைகள், அழகு பானைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

இந்நிலையில், நேற்று (ஜூன் 26) முருகேசன் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டும் பணி மேற்கொண்டபோது, இரண்டு அடி ஆழத்திலேயே பழங்கால சுவர் தென்பட ஆரம்பித்தது. அப்போது நீண்ட சுவருக்கு பக்கத்தில் பாதியளவு சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு சுவர்களிலும் இரண்டு அடி நீளமும், ஒரு அடி அகலமும் 15 செ.மீ உயரமும் கொண்ட செங்கற்கள் உள்ளன.

இந்த செங்கற்கள் நல்ல உறுதிதன்மை கொண்டதாக உள்ளன. மேலும் இச்செங்கற்கள் வரிசையாக இல்லாமல் ஒன்றன் மேல் ஒன்றாக சரிவான வகையில் அடுக்கி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா எனக் கண்டறியமுடியவில்லை எனத் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டிடத்தின் அடிப்புறம் வரை தோண்டியபின்தான் உறுதியாகச் சொல்ல முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

5ஆம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் மேலும் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் பழமை வாய்ந்த தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.