கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்திருந்தால் அங்குப் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 121 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தகவல் அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 58 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 21 பேரைக் காணவில்லை என்றும் தகவல் கூறப்படுகிறது. மேலும் சுமார் 8,247 குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது பேரிடர் மீட்பு ஆணையம்.