2019 மக்களவை தேர்தலும், சித்திரை திருவிழாவும் ஒரேநேரத்தில் நடைபெற இருப்பதால், தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு கூடுதலாக 3,700 காவலர்கள் வேண்டும் என தமிழக டிஜிபிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2019 மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மதுரையில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அன்றைய தினம் மதுரையில் தேர்தல் நடத்துவதில் சிரமம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரையில் மக்களவை தேர்தலைத் தள்ளிவைக்கக்கோரி வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, மதுரையில் தேர்தலை வேறு தேதிக்கு மாற்றமுடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.
மக்களவை தேர்தலுடன், சித்திரை திருவிழாவும் ஒரேநேரத்தில் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு மட்டும் 12,000 காவலர்கள் நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சித்திரை திருவிழாவையும், மக்களவை தேர்தலையும் சுமுகமாக நடத்த 12,000 ஆயிரம் காவலர்கள் போதாது எனவும், கூடுதலாக 3,700 காவலர்கள் வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார்.