சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் தொடரலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சிலைக் கடத்தல் வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாகக் கூறி, சிலைக் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதைதொடர்ந்து, சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த பொன்மாணிக்கவேல், கடந்த நவம்பரில் பணி ஓய்வு பெற்றார். அதைதொடர்ந்து, சிலைக்கடத்தல் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை நியமனம் செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. அதில் பொன்மாணிக்கவேல் விளம்பர நோக்கில் நடந்துகொள்கிறார் என்றும் முறையாக வழக்குகளை விசாரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இன்று (ஏப்ரல் 12) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
மேலும், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் பணியை தொடரலாம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், சிலைக் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அதிகாரமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.