இந்தக் குறிப்பு சுஜாதாவின் எண்ணற்ற வாசகர்களின் இடையறாத, தடுமாறும் தொலைபேசி குரல்களுக்கிடையே எழுதப்படுகிறது. இந்தக் குறிப்பினால் அந்தக் குரல்களின் ஆழம் காணமுடியாத துயரத்தின் நடுங்கும் நிழல்களைத் தொட முடியாது. நமது கனவுகளோடும் சிந்தனைகளோடும் வெகு ஆழமாக உரையாடிய மகத்தான கலைஞனின் நீங்குதல் நமது அந்தரங்கத்தின் ஒரு பகுதியை இழப்பதாகவே இருக்கிறது. சுஜாதா அரைநூற்றாண்டு கால தமிழ் வாசகனின் அந்தரங்கம். தமிழில் வாசிப்புப் பழக்கமுள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கத்திலும் கனவிலும் ஏதாவது ஒரு மூலையில் அவர் படிந்தே இருப்பார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது “மனித வாழ்வின் தீராத புதிரும் விசித்திரமும் என்னவென்றால் மனிதர்கள் இந்த வாழ்க்கையிலிருந்து திடீரென காணாமல் போய்விடுவதுதான்” என்று கூறினார். சுஜாதாவும் இப்போது அந்த விசித்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டார்.
மொழியை வெறுமனே பயன்படுத்தும் கலைஞர்களுக்கிடையே தான், புழங்குகிற மொழியைப் புதுப்பித்து அதற்குப் புதிய உள்ளோட்டங்களை வழங்குகிறவனே மகத்தான கலைஞனாகிறான். 20ஆம் நூற்றாண்டில் பாரதியும் புதுமைப்பித்தனும் தமிழில் உருவாக்கிய நவீனத்துவத்தின் பேரலைகள் மொத்த படைப்பிலக்கியத் தையும் மாற்றி அமைத்தது. அதற்குப்பிறகு தமிழ் உரைநடைக்குப் புதிய வேகமும் வண்ணமும் கொடுத்த பேரியக்கம் சுஜாதா. கடந்த ஐம்பதாண்டு காலமாக சுஜாதாவின் இந்த எழுத்தியக்கம் தமிழ் உரைநடைக்கு எண்ணற்ற புதிய சாத்தியங்களை வழங்கியது. தமிழ் வெகுஜன எழுத்தின் அசட்டு மிகை உணர்ச்சிகளையும் பாசாங்குகளையும் சுஜாதாவின் வருகை துடைத்தெறிந்தது. குடும்பக் கதைகளும் வரலாற்றுப் புனைவுகளும் நிரம்பிய பரப்பில் அறிவுணர்ச்சி மிகுந்த ஒரு நுண்ணிய அழகியலை அவர் உருவாக்கினார். சுஜாதா தமிழுக்கு வழங்கிய இந்தப் புத்துணர்ச்சி தமிழில் படைப்பிலக்கியம் சார்ந்த முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களுக் குப் பெரும் உத்வேகம் வழங்கியது. சிலர் அதைத் தங்கள் இலக்கியப் பாசாங்குகள் காரணமாக வெளிப்படையாக அங்கீகரிக்க மறுத்தனர். ஆனால் எழுபதுகளுக்குப் பிறகான தமிழ் புனைகதை பரப்பில் சுஜாதா உருவாக்கிய தடங்கள் அழுத்தமானவை. மீறிச் செல்ல முடியாதவை.
ஒரு எழுத்தாளனின் அக்கறைகள், ஈடுபாடுகள் எவ்வளவு பரந்த தளத்தில் செயல்பட முடியும் என்பதற்கு அவர் ஒரு தனித்துவமான உதாரணம். தமிழ்க் கவிதை இயக்கத்தை வெகுசன தளத்தில் கொண்டு சென்றதில் அவரது செயல்பாடுகள் முக்கியமானவை. உரைநடையைத் தனது பிரதான வெளிப்பாட்டு முறையாகக் கொண்ட சுஜாதா கவிதைமீது காட்டிய இந்தத் தீவிர அக்கறை நவீன கவிதை இயக்கத்தை நோக்கிப் புதிய வாசகர்களைத் தொடர்ந்து உருவாக்கியது. அவர் உண்மையில் தீவிர இலக்கிய இயக்கத்திற்கும் வெகுசன வாசகர்களுக்கும் இடையே பெரும் இணைப்புப் பாலமாக இருந்தார். ஒவ்வொரு இளம் எழுத்தாளனைப் பற்றியும் அவர் எழுதினார். தமிழில் வெளிவந்த பல கவிதை நூல்கள் குறித்த முதல் குறிப்பை அவர் எழுதியிருக்கிறார்.
சுஜாதா அறிவியலைத் தமிழில் எழுதுவதன் சவால்களை மிக வெற்றிகரமாகக் கையாண்டார். அறிவியலைத் தமிழில் மொழி பெயர்ப்பதல்ல. அதை ஒரு சிந்தனை முயற்சியாக உள்வாங்கி எழுதியதன் வழியாக சுஜாதா தமிழ் அறிவியல் எழுத்துக்களின் அடையாளமாக மாறினார். அவரது புனைகதைகள் அதன் நுண்ணிய சித்தரிப்பு சார்ந்த அழகியலுக்காகவும் உயர்குடி, மத்தியதர மற்றும் விளிம்புநிலை, மனிதர்களின் வீழ்ச்சிகளை, பாசாங்குகளைக் காட்டும் யதார்த்தத்திற்காகவும் நவீன தமிழிலக்கியத்தில் காலத்தால் அசைக்க முடியாத இடத்தைப் பெற்று நிற்கின்றன.
அவர் எந்த அளவு பிரபலமாக அறியப்பட்டாரோ அந்த அளவு விலகியிருப்பவராகவும் தனிமை உணர்ச்சி கொண்டவராகவும் இருந்தார். தனது படைப்பு சார்ந்த தனிமையை ஆரவாரங்கள் தீண்டக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். எழுதுவது ஒன்றே அவருக்குப் பெரும் போதமாக இருந்தது. புகழ் சார்ந்த பலவீனங்களும் பதற்றங்களும் அவருக்கு இருந்ததில்லை. தமிழ் இலக்கிய உலகின் ஊழல்களால் அவருக்குரிய மரியாதைகளையும் அங்கீகாரங்களையும் இங்குள்ள இலக்கிய அமைப்புகள் முற்றாக மறுத்தன. அவருடைய அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிட அவருக்கு வழங்கப்பட்ட இலக்கிய விருதுகளின் பெயர் ஏதும் இல்லை. ஆனாலும் அது அவருக்கு என்றுமே அவசியமாக இருந்ததுமில்லை. அவர் லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத் துடிப்பினால் இயங்கிய கலைஞன்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே நிகழ்ந்த போராட்டம், பிப்ரவரி 27 ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு அவரது இறுதிமூச்சு அதிர்ந்து கொண்டிருந்த மருத்துவமனை அறையில் ஒருகணம் நிற்க முடியாமல் மனம் கலைந்து வெளியே வந்தேன். அது நான் அறிந்த சுஜாதா அல்ல. அவர்தான் ஒருபோதும் அப்படிப் பார்க்கப்படுவதை விரும்பமாட்டார். அவரருகில் இருந்த நண்பர் தேசிகன் என்னிடம், ‘நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒன்று இங்கு வரவழைக்க முடியுமா?’ என்று கேட்டார். நான் சுஜாதாவுக்கு எத்தனையோ முக்கியமான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இது அவருக்காக அல்ல, அவரின் பொருட்டு நான் கடைசியாக வாங்கிய புத்தகம்.
இந்தியா டுடே
மார்ச் 12, 2008