ஜாக்குவார் காருக்குப் பதிலாக பிஎம்டபிள்யூ காரை தந்தை பரிசாகக் கொடுத்ததால் கோபத்தில் ஆற்றுக்குள் காரை மூழ்கடிக்க முயன்ற மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் ஒருவரிடம் அவரது மகன் ஜாகுவார் கார் கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை ஜாகுவார் காருக்கு பதிலாக பிஎம்டபிள்யூ காரை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். தான் கேட்ட காரை தந்தை வாங்கித்தராததால் ஆத்திரமடைந்த இளைஞர், பரிசாகக் கொடுத்த பிஎம்டபிள்யூ காரை அங்குள்ள ஆற்றில் இறக்கியுள்ளார்.
ஆற்றில் கார் அடித்துச் செல்லப்படும் காட்சியையும் வீடியோவாக தனது செல்போனில் படம்பிடித்த அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பின்னர் ஆற்றின் நடுவே புற்கள் நிரம்பியிருந்த இடத்தில் கார் சிக்கிக்கொண்டு நின்றது. இதனை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு குவியத்தொடங்கினர். பின்னர், அவர்கள் உதவியுடன் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார் அந்த இளைஞர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆற்றில் மூழ்க வைக்க முயன்ற பிஎம்டபிள்யூ காரின் மதிப்பு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இளைஞரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.