டிக்டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார். டிக்டாக் செயலிமூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், அதனால் அந்தச் செயலிக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியைத் தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, டிக்டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது.
இதைதொடர்ந்து, பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களிலிருந்து டிக்டாக் செயலியை நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசுக் கடிதம் அனுப்பியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்கிவிட்டன.
இந்நிலையில், இதுதொடர்பான மனு இன்று (ஏப்ரல் 22) மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே டிக்டாக் செயலிக்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம் என அந்நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டிக்டாக் செயலிக்கான தடையை இடைக்காலமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், டிக்டாக் செயலிமீதான தடைகுறித்து வரும் 24ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றம் இதைத் தவறும் பட்சத்தில் டிக்டாக் செயலிமீதான தடை தளர்ந்ததாகக் கருதப்படும் எனத் தெரிவித்தனர்.