எந்த வருடமும் இல்லாது இந்த வருடம் சென்னையை கோடை காலம் வாட்டி வதைத்து கடுமையான தண்ணீர் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. தலைநகர் சென்னையில் இனி வரும் காலங்கள் எப்படி இருக்க போகிறதோ என்ற ஐயத்தை இந்த தண்ணீர் பிரச்சினை காட்டியுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவு, பருவ மழைநீர் குறைவு, ஏரி குளங்கள் தூர்வாராமை போன்ற பல காரணங்களால் சென்னையின் சில பகுதிகளில் தண்ணீர் சுத்தமாக வற்றிபோய் உள்ளது. மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தையே நம்பி உள்ளனர்.
இந்நிலையில் கோடைகாலம் முடிந்து ஓரளவிற்கு வெயில் குறைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை எட்டிப்பார்த்திருக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்ந்துள்ளது. தங்களது தண்ணீர் பிரச்சினையை மக்கள் ஓரளவிற்கு மறந்துள்ளனர். இரண்டு நாட்கள் பெய்த மழைநீரையே பெரும்பாலான இடங்களில் உபயோகப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சினை சென்னையில் ஓய்ந்ததா என்று கேட்டால், முழுமையாக ஓய்ந்ததாக சொல்ல முடியாது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
இன்னும் குறிப்பாக வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர் போன்ற இடங்களில் தண்ணீர் லாரியையே மக்கள் நம்பி உள்ளனர்.
மேலும் மழை பெய்ய தொடங்கிய இந்த காலகட்டத்தை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்படி, “வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை கன மழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் தண்ணீரை எந்த அளவிற்கு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு இந்த தண்ணீர் பிரச்சினை மூலம் உணர்ந்திருப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.