நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2013ஆம் ஆண்டு, அரசு திட்டங்களுக்காகத் தனியார் நிலங்கள் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திலிருந்து நிலம் கையகப்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களைப் பாதுகாக்க கடந்த 2015 ஆம் ஆண்டு 105 (a) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, இந்த புதிய சட்டத்தால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விவசாயிகளின் வாதங்களை ஏற்றுத் தமிழக அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்களை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.