வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழை பொய்த்துவிட்ட காரணத்தால் சென்னை உட்படப் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. தலைநகரான சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயிலின் வெப்பத்தைக் குறைக்கும் விதமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. ஆனால் சென்னையில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை.
இதன் எதிரொலியாகக் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான வறட்சியைச் சென்னை சந்தித்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தென்சென்னையில் பரவலாக இன்று (ஜூன் 20) மழை பெய்தது. தற்போது சென்னையில் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், கோவிலம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகியிருந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடல்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுவதால் வெப்பநிலை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.