தமிழகத்தில் சாலைகளை முறையாகப் பராமரிக்காததே விபத்துகள் அதிகரிக்க காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
சாலை விபத்தில் கர்ப்பிணிப்பெண் புஷ்பா என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு இன்று (மே 14) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “1998இல் ஏற்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், 25 ஆண்டுக்கு மேலாகியும் திருத்தம் கொண்டு வராதது, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை மறுப்பதாகும். சாலை விதிகளை முறையாக பின்பற்றாதது, போதிய விழிப்புணர்வு இல்லாதது, முறையாக சாலைகளை பராமரிக்காமல் இருப்பது ஆகியவற்றால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன” எனத் தெரிவித்தார் நீதிபதி கிருபாகரன்.
மேலும், விபத்தில் உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி. சாலை விதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாததால் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன என்ற பல்வேறு வழக்குகளில் நீதிபதிகள் பலர் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.