திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டுக்கு 100 மருத்துவ படிப்பு இடங்கள் கூடுதலாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதைதொடர்ந்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 250 இடங்கள் இருக்கின்றன.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், சோதனை என்ற பெயரில் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில், நடப்பாண்டில் மருத்துவ படிப்புக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, 150 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
நடப்பு கல்வியாண்டு முதல் கரூர், திருநெல்வேலி இடங்களில் மாணவர்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 இடங்களுக்கான அனுமதி இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்தாண்டு தமிழகம் முழுவதும் உள்ள 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள் இருந்த நிலையில் தற்போது இந்தாண்டு புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியுடன் கூடுதலாக 250 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் புதிதாக எட்டு மருத்துவப் படிப்புகளை நடப்பாண்டில் கொண்டுவரப்படுகிறது. இருதய நோய் அறுவை சிகிச்சை, நரம்பியல் நிபுணர், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட எட்டு புதிய மருத்துவப் படிப்புகள் நடப்பாண்டில் கொண்டுவரப்படுகின்றன.