நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலா தேவி. சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தினமும் விசாரித்து வந்தது.

நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி நிர்மலா தேவி பலமுறை மனு தாக்கல் செய்தார். ஆனால், மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன்வழங்க மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதாக கடந்த மார்ச் 12ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், நிர்மலா தேவி வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதால், இதனை சிபிஐக்கு மாற்றக் கோரி அனைத்து இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி அறிக்கையையும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கவும் கீழ் நீதிமன்றத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூலை 12) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி விசாரித்துக் குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அதில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்தும் உத்தரவிட்டனர் நீதிபதிகள்.