பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னையில் 6 கல்லூரிகள் இயங்கிவருகின்றன. பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் முதல்வராக இருந்த காளிராஜ் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வராக என்.சேட்டு தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி பேராசிரியர்கள் நந்தினி உட்பட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த பச்சையப்பன் அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முறையான நடைமுறைகளைப் பின்பற்றிய பின்பே முதல்வர் தேர்வு செய்யப்பட்டாரெனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்கங்களையும் கேட்ட நீதிபதி, பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என்.சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்தத் தேர்வு முறைகேடுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, கல்லூரி முதல்வர் தேர்வுக்கான முறையான நடைமுறைகளைப் பின்பற்றி, தேர்வு செய்துகொள்ளலாமெனத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி.