திருமண புகைப்படங்கள் என்பது இப்போது தேனிலவுக்கு ஒரு புகைப்படக்காரரையும் கூட அழைத்துச் செல்லும்படியாக வளர்ந்துவிட்டதைக் கண்டு கலாச்சார காவலர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.
மொபைல் கேமராக்கள் நம் அனைவரின் கைகளிலும் தவழும் இந்த யுகத்தில் நாம் அனைவருமே நல்ல கற்பனை வளத்துடன் நம்மைப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படி இருக்க ஒரு காலத்தில் ஃபோட்டோக்கு நிற்பது வெட்கம் நிறைந்த செயலாக இருந்த நிலை மாறி இன்று தங்களைத் திரைப்படங்களில் வரும் நடிகர்கள் போலவும் தனது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கும்போது அதை ஒரு பிரபலமானவர்களின் நிகழ்விற்குச் சற்றும் குறைந்ததாக இருக்கக் கூடாது எனவும் தங்கள் வாழ்வு முழுவதும் நினைவில் தங்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்ற மனநிலை மாறி வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளவும், ஆல்பங்களில் வைக்கவும், தங்கள் வீட்டுச் சுவர்களில் என்றும் அலங்கரிக்கவும், ஒரு காவிய பயணத்தை நினைவூட்டவும் தம்பதிகளுக்கு இன்று அற்புதமான படங்கள் வேண்டும்.
திரைப்பட கலைஞர்கள் பலரும் தங்களுக்குத் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் வரை தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் பொருளாதார தேவைகளுக்காகவும் இன்று திருமண புகைப்படக்காரர்களாக மாறி வருகின்றனர்.
இந்த இரண்டு தேவைகளும் ஒன்றோடு ஒன்று சந்திக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாகத் திருமண புகைப்பட சந்தை பெருமளவு அதிகரித்துள்ளது. இன்று அது அடுத்தடுத்த நிலைக்குச் சென்று தேனிலவு வரை சென்றுள்ளது.
சில தம்பதிகள் இந்த போட்டோஷூட் தங்கள் திருமணத்தின் அழகான தொடர்ச்சியாகப் பார்க்கின்றனர். திருமணத்தின்போது நிறைய விருந்தினர்களும் உறவினர்களும் சூழ இருந்து தற்போது கணவன் மனைவி என இருவர் மட்டுமே இருப்பதை அவர்கள் பரவசமூட்டும் அனுபவமாகப் பார்க்கின்றனர்.
ஆனால் இந்த உணர்வு தற்போது இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. அது நிர்வாண புகைப்படங்கள்! தம்பதிகள் தங்களை முதலிரவு அன்று அரை நிர்வாணமாகவோ முழு நிர்வாணமாகவோ படமெடுக்குமாறு கேட்பதாகப் புகைப்படக்காரர்கள் சொல்கிறார்கள்.
கோரேகானில் உள்ள ப்ரியங்கா சச்சார் தனக்கு இப்படி ஒரு அழைப்பு மணமகனிடமிருந்து வந்ததாகச் சொன்னார். “மணமகன்தான் என்னை அழைத்தார் தங்களுடைய முதலிரவு அன்று நிர்வாணமாகப் படமெடுக்கும்படி. எனக்கு அது தயக்கமாகவும் முழு மனதில்லாமலும் இருந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை. பெண்களைத் தனியாக நிர்வாணமாகப் படமெடுப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பெண்கள் தங்கள் உடலைக் கொண்டாடும் விதமாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன். அதை மிகுந்த ரசனையுடன் எடுக்கலாம். ஆனால் ஒரு ஆண் துணையோடு எடுப்பதில் எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது.” என்றார்.
டெல்லியைச் சேர்ந்த ஃப்பைசான் படேல் தானும் இப்படி ஒரு அழைப்பை நிராகரித்ததாகச் சொன்னார். இதில் அவர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை நிர்வாணமாக எடுக்கச் சொன்னார்கள். இதிலும் அழைப்பு மணமகனிடமிருந்து வந்ததாகவும் தான் அதற்கு மணப்பெண்ணிற்கு இதில் சம்மதமா எனத் தான் கேட்டதாகவும் சொன்னார். மேலும் அவர் தன்னுடைய புகைப்பட ப்ராஜக்டுகளை தான் விளம்பரப்படுத்துவதாகவும் இப்படியான நிர்வாண படங்களைத் தான் வெளியிட முடியாது இது தன்னுடைய மற்ற வேலைகளைப் பாதிக்கும். அப்படி தான் எடுத்த புகைப்படங்கள் தன்னுடைய வளர்ச்சிக்கு உதவாதபோது அதில் ஈடுபடுவதில் எந்த பயனும் இல்லை என மறுத்ததாகச் சொன்னார்.
“இன்று இந்தியாவில் தம்பதியினர் திருமண புகைப்படங்களில் முத்தம் கொடுப்பது இயல்பானது. ஆனால் முதலிரவன்று நிர்வாணமாக இருப்பது அப்படியல்ல” எனப் புகைப்படக்காரர்கள் சொல்கிறார்கள். மேலும் இன்று திருமண புகைப்படமெடுப்பது பல நிலைகளில் உள்ளது உதாரணமாக ஃபேஷன் புகைப்படங்கள், கேண்டிட் புகைப்படங்கள். இதுவரை இந்தியத் திருமணங்களில் வராத ஒரு நிலை நிர்வாண புகைப்படங்கள் தான்.” என மும்பையைச் சேர்ந்த புகைப்படக்காரர் சுஷாந்த் கூறுகிறார்.
மும்பையைச் சேர்ந்த மற்றொரு புகைப்படக்காரர் யஷ்வந்த் தவாஜ் ஷா, “மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பொது நண்பர் மூலம் என்னைத் தொடர்புகொண்டு மும்பை கடற்கரையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கள் முதலிரவைப் படமெடுக்குமாறு கேட்டனர். நான் அதைத் தன்மையாக மறுத்தேன். அவர்கள் மேலும் வற்புறுத்தவே அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என நினைத்து படமெடுப்பதற்கு மிக அதிகமான ஒரு விலையைச் சொன்னேன் ஆனால் அவர்கள் அதற்கும் சரி என்றார்கள் பிறகு என்னால் முடியாது என மறுத்துவிட்டேன்” எனச் சொன்னார்.
நினைவுகளுக்காக இந்த படங்களை எடுப்பதே முதன்மையானது என்றாலும், தேனிலவுப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வது முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தங்களுடைய மிகச்சிறந்த படங்கள் தனக்குத் தேவை என்று நினைக்கின்றனர். தங்கள் இணையுடன் ஒரு கனவு போன்ற இடத்தில் அவர்கள் இருந்ததை பதிவு செய்ய விரும்புகிறார்கள். அதிலும் தேனிலவின்போது எடுக்கப்படும் படங்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க பாதுகாக்கப்பட வேண்டியவை என உணர்ந்திருக்கிறார்கள். அதில் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் அச்சம், வெட்கம், சமூக காரணங்கள் தாண்டிய ஒரு தனிப்பட்ட அற்புத நிகழ்வாக அது பதியப்படவேண்டும் என நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.