பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி ஒரு கும்பல மிரட்டிவந்தது தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் வெளியிட்டார். அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு இன்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை மாவட்ட எஸ்.பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிரான புகாரில் கோவை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருவதாகவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார். மேலும் மனுதாரர் டி.ஜி.பிக்கு அனுப்பிய கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தை நாட முடியாது எனவும், முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோன்ற வழக்குகளில் உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரணைக்கு உத்தரவிட முடியும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவை எஸ்.பி பாண்டியராஜன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தார்.