போக்சோ சட்டம்குறித்து மாணவர்கள், இளைஞர்களுக்குப் போதிய விழிப்புணர்வை சமூகசேவை நிறுவனங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
திருமணமானவரால் கடத்தப்பட்ட தனது மகள் பிரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீட்டுத்தரக்கோரி நாகையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறையினர் பிரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிரியாவுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, நீதிபதிகள் அந்தப் பெண்ணின் தாயிடம் விசாரித்தப்போது, தனது மகளைக் கூட்டிச் சென்ற வாலிபருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்சியடைந்த நீதிபதிகள், முதலில் பெண்ணைக் காணவில்லை என்று பதிவுசெய்யப்பட்ட வழக்கு, பின்னர் அவர் மைனர் பெண் என்று தெரிந்தவுடன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டனர்.
அதைதொடர்ந்து, அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விவரம் தெரியாமல் செய்யும் தவறுகளால் இளம் வயதிலேயே பிரியா போன்றவர்கள் தங்களுடையை வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தனர் நீதிபதிகள்.
மேலும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போக்சோ சட்டம்குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்குக் காரணம் எனக் கூறிய நீதிபதிகள், போக்ஸோ சட்டம்குறித்து சமூக சேவை அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.