என். விஜயன் எழுதிய ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவலர்கள் என 4 பேரை தேர்தல் பணியிலிருந்து விடுவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
நாட்டை உலுக்கும் ரஃபேல் ஊழல் குறித்து என்.விஜயன் எழுதிய ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை பாரதி புத்தகலாயம் நேற்று (ஏப்ரல் 2) வெளியிட இருந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசனும், இந்து குழும தலைவர் என்.ராமும் இந்நூலை வெளியிட்டு பேச இருந்தனர். அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தை பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோர் பேச இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்திருந்தார்.
புத்தக வெளியீட்டிற்கு சில மணி நேரங்கள் முன்னதாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்துடன் வந்த காவல் துறையினர், அச்சிடப்பட்டிருந்த சுமார் 150 புத்தகங்களை பறிமுதல் செய்தனர். புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பின்னர், இந்தப் புத்தகம் பி.டி.எஃப் வடிவில் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. மேலும், இந்த புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்க அறிக்கை கேட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர், நேற்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தக ஆலயத்தில் எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகத்தை வெளியிட்டார் என்.ராம். மேலும் இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், ‘சிறு நிகழ்ச்சியாக முடிந்திருக்க வேண்டிய புத்தக வெளியீடு ஆட்சியாளர்களால் பெரிய அளவில் மாறியுள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுக்குரியது’ என்று கூறினார்.
ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்த உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தகத்தை பறிமுதல் செய்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புத்தகம் தடை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.