ஒலிம்பிக் ஜோதியை அணைத்த கொரோனோ

கோகுல கிருஷ்ணன் கந்தசாமி

உலகம் முழுவதும் ஏறத்தாழ 17 இலட்சம் நபர்கள் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு இலட்சத்தை தாண்டிவிட்டது. உலகின் வல்லரசாக அறிவித்து கொண்டு செயல்படும் அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம். இறந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரம். உலகம் முழுவதும் முதலில் ஒரு இலட்சத்தை தாண்டிய பாதிப்பு நிகழ்ந்தது அமெரிக்காவில். உலகம் முழுவதும் எல்லா காலங்களிலும் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருப்பவை விளையாட்டுபோட்டிகள். உலகின் பலபகுதிகளில் நிகழும் விளையாட்டு போட்டிகளின் பதக்கப் பட்டியலில் தவறாது இடம்பெறும் நாடுகளில் பல கொரோனா பாதிப்பு பட்டியலிலும் போட்டியிடுகின்றன. விளையாட்டு போட்டிகளின் பரிசுத் தொகைகளும் அதன் சந்தை வணிகமும் மிகப்பெரியது. 2018 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி 488.5 பில்லியன் டாலர். அதன் 2022 ஆண்டின் எதிர்பார்ப்பு மதிப்பு 614.1 பில்லியன் டாலர். ஆனால் கொரோனாவின் பதிப்பில் அந்த மதிப்பு கண்டிப்பாக குறைந்துவிடும்.

ஜப்பானில்  நடைபெற இருந்த  ஒலிம்பிக் போட்டிகள் போட்டியாளர்கள் மற்றும் வீரர்களின் கடும் அழுத்தத்திற்கு பிறகு 2021 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவது நடைபெற இருக்கும் கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைபந்து,பேஸ்பால் விளையாட்டு போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளும் கைவிடப்பட்டுள்ளன.

UEFA சாம்பியன்ஷிப் மற்றும்  UEFA ஐரோப்பா  கால்பந்து போட்டிகள் முறையே 1300 மில்லியன் மற்றும் 237 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கொண்ட போட்டிகள்.  இந்த போட்டிகளால் வணிக சந்தைகளில் பல ஆயிரம் கோடிகள் புழங்கும். பல கட்டமாக இந்த போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் இந்தப் போட்டிகளை நடத்தும் அமைப்பினர் தேதி குறிப்பிடாமல் போட்டிகளை ஒத்தி வைத்திருக்கின்றனர்.  யுரோ 2020 ஆண்களுக்கான போட்டிகள் 2021 ஆம் ஆண்டும் பெண்கள் போட்டிகள் 2022 ஆம் ஆண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா 1 ரேஸ் போட்டிகளின் உலகளாவிய பரிசுத் தொகை மதிப்பு 797.5 மில்லியன் டாலர்.  அசெர்பஜென், ஆஸ்திரேலியா, பஹ்ரைன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற இருந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தனிநபர் விளையாட்டு போட்டிகளில் மிக அதிக பரிசு தொகை கொண்ட விளையாட்டு டென்னிஸ். ஏறத்தாழ 35-45 மில்லியன் டாலர் பரிசு தொகை கொண்டது. இந்த ஆண்டு ஃபிரெஞ்சு ஓபன் போட்டிகள்   செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.விம்பிள்டன் போட்டிகள் தற்போதைய நிலையில் கைவிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போது முதல்முறையாக விம்பிள்டன் கைவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது. தினமும் உலகின் ஏதோவொரு மூலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.இந்தியாவைப் பொறுத்தவரை இது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் காலம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் தற்போதைய சூழலில் இல்லை. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், 20-20 போட்டிகள் என அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.சில நாடுகளில் மட்டும் ரசிகர்கள் இன்றி வீரர்கள் மட்டும் விளையாடுகின்றனர்.

அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கூடைப்பந்து, ஹாக்கி, பேஸ்பால், பேட்மின்டன் என குழு விளையாட்டு போட்டிகளும் தனி விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன. விளையாடுவதைப் போலவே போட்டிகளை காண்பதும் மனித மனங்களில் ஒரு மகிழ்ச்சியை, நம்பிக்கையை, வலிமையை உணர்த்தக் கூடிய நிகழ்வு. உலகின் ஏதோவொரு மூலையில் நிகழும் போட்டிகள் உலகின் வேறொரு பகுதியில் இருப்பவர்களில் ஒரு வீரனை உருவாக்க கூடும்.அதற்கான சூழல் தற்போது இல்லை.  அவுட் டோர் கேம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் இன் டோர் கேம்கள் முக்கியம் பெறுகின்றன. ஆனால் அவற்றில் குழு விளையாட்டுகள் குறைவு. என்வே மக்கள் இணையவழியாக குழு விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.

பல அணிகளின் வீரர்கள், மேலாளர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா மக்களுடன் விளையாடும் இந்த விளையாட்டில் இறுதியாக மக்கள் வென்று விடுவார்கள் என்பது நிதர்சனம் என்றாலும் சில  இழப்புகளை சரிசெய்யமுடியாது.