கடந்த ஞாயிறு (ஜூன்,09) அன்று ஆஸ்திரேலியாவுடனான உலகக்கோபை லீக் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானின் இடது கையில் காயம் ஏற்பட்டதையடுத்து தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்.
12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை 15 போட்டிகள் நடந்துள்ளன. இந்தியா விளையாடிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கவுடனான முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது லீக் ஆட்ட்தில் 36 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை(ஜூன்,09) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்து ஆல் ஆவுட் ஆகினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் ஷிகர் தவான் 109 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். 40ஆவது ஓவரை வீசிய ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டரின் பந்தை எதிர் கொண்டப்பொழுது ஷிகர் தவானின் இடது கையில் காயம் ஏற்பட்டது. ஆனால், வலியை தாங்கிக்கொண்டு விளையாட்டைத் தொடர்ந்தார் தவான். இந்தக் காயத்துடன் இவரால் பீல்டிங் செய்ய இயலாது என்பதால், இந்தியா பீல்டிங் செய்த போது ஷிகர் தவானுக்கு மாற்றாக ஜடேஜா விளையாடினார்.
இதனையடுத்து சிகிச்சை மேற்கொண்ட ஷிகர் தவான் மூன்று வாரங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடரிலிருந்து தவான் விலகியுள்ளார். இந்தச் செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நல்ல ஃபாமில் உள்ள ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று சிலர் கருத்துக்கள் கூறிவருகின்றனர். இவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்குவார் என கூறப்படுகிறது.