யாரோ மனிதர்கள் -2
சாலை ஓர தேநீர் கடை. கூரையால் வேயப்பட்ட முகப்பு. சூடாக கொதிக்கும் பால். கடைக்கு வெளியே பழைய பெஞ்ச் இரண்டு. அதில் ஒன்றின் நான்காம் காலுக்கு ஒரு சிறிய கல் முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டிருந்தது.
தேநீர் கடைக்காரர் சிரித்த முகமாக வரவேற்றார்.
” என்ன சாப்புடறீங்க ”
” ஒரு Black coffee – சர்க்கரை இல்லாமல் ”
சட்டென என்னை நிமிர்ந்து பார்த்தார்.
” பால் இல்லாமல் குடிக்கறதே தண்டனை. இதுல சர்க்கரையும் இல்லாமலா ? ”
” இல்லை. நான் இரண்டையும் சேர்ப்பதில்லை ” சிரித்துக்கொண்டே சொன்னேன்.
” என்னவோ போங்க. நான் போட்டுத் தர்றேன். ஆனா பாலும் இல்லாம, சர்க்கரையும் இல்லாம … எப்படித்தான் குடிக்க முடியுதோ ” என்று சிரித்தார்.
இருவரும் சிரித்தோம்.
சூடாக வந்த சர்க்கரை அற்ற ப்ளாக் காஃபியை ருசித்த போது ரசிக்க ஆரம்பித்தேன். அனைத்து கடைகளிலும் ப்ளாக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. நீரின் சுவை, அது கொதிக்கப்பட வைத்த பின் இருக்கும் சுவை, காஃபிபவுடரின் தரம், அது சேர்க்கப்பட்ட அளவு, சுடு தண்ணீர், காப்பித்த்தூள் இரண்டையும் கலந்த விதம் .. இதெல்லாம் சேர்ந்தது தான ப்ளாக் காஃபி. மிக நீண்ட அனுபவம் இவருக்கு இருக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு.
” ப்ளாக் காஃபி நல்லா இருக்குங்க. எவ்வளவு வருடமா இந்தக் கடை வச்சுறுக்கீங்க ? ”
” நல்லாருக்கா?. சந்தோஷம். அது ஆச்சு …. 10 வருஷமா. இதுக்கு முன்ன வேற ஒரு தொழில்ல இருந்தேன். நஷ்டமாச்சு. அதனால இதை வச்சேன். அப்படியே ஒட்டிட்டு இருக்கேன் ”
இயலாமையை சிரித்து சொல்லும் மனிதர்களின் ஆளுமை பெரும் அழகு. வாழ்க்கை அவர்களை புடம் போட்டதில் அவர்கள் சிரிப்பை பழகி இருப்பார்கள். வெறுமையான அந்தச் சிரிப்புக்கு பின் ஓராயிரம் கதைகள் இருக்கக்கூடும். பொதுவாகவே இந்தத் தேநீர் கடை மனிதர்கள் வித்தியாசமானவர்கள். காலை முதல் மாலை வரை ஸ்ஸ்ஸ்ஸ் என சத்தமிடும் நெருப்புக்கு எதிரிலேயே வியர்த்துக்கொண்டு நிற்பவர்கள். பெரும்பாலும் அமைதியாக, எப்போதாவது பேசிக்கொண்டு. அந்த பேச்சு பொதுப்பேச்சாகவே இருப்பது ஆச்சர்யம். அவர்களின் வாழ்க்கை பேச்சினை அவர்கள் பேசுவது இல்லை. ஆனால் ஊராரின் வாழ்க்கை பேச்சினை அவர்கள் அந்தக் கடையில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
” நஷ்டத்தை எல்லாம் சந்திச்சு மீண்டு வந்தாச்சா ? ” என்று கேட்டு நிதானித்தேன். சில மனிதர்கள் தங்களின் Personal பக்கங்களை சொல்ல விரும்ப மாட்டார்கள்.
ஒரு சில நொடிகள் யோசித்தவர் சொன்னார்.
” கிட்டதட்ட ஆச்சு. இன்னும் மூணு மாசத்தில் சரி பண்ணிடுவேன். பொண்ணுக்கு திருமணம், பேத்தி ன்னு கொஞ்சம் செலவு. இல்லேன்னா முடிச்சிருப்பேன் ” எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னார். ஆனாலும் சிரித்துக் கொண்டு.
” ஓ .. தாத்தா ஆயாச்சா ? ”
இப்போது என் முகத்தை பார்த்து சிரித்தார். மனிதர்கள் தாங்கள் விரும்பாத நினைவுகளை வேறெங்கோ பார்த்தே பேசுகிறார்கள்.
” ஆமா. பேத்தி ஒண்ணு தான் வாழ்க்கையில சந்தோஷமே. ”
இருவரும் சிரித்தோம். பின் இருவரும் அமைதியாக இருந்தோம். சில நொடிகளுக்கு பின் மீண்டும் பேசினார்.
” இந்தக் கடைக்கு வர்ற மனிதர்கள் தான் என் வாத்தியார்கள். அவர்களால தான் கடனை கிட்டத்தட்ட முடிச்சிட்டேன் ” என்று மீண்டும் சிரித்தார்.
மனிதர்கள் நம்பிக்கையானவர்களுக்காக காத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையான மனிதர்களை சந்தித்துவிட்டால் தன் அந்தரங்கப் பக்கங்களை திறந்து காட்டுகிறார்கள்.
” அட .. கடைக்கு வரும் மனிதர்களா ? அது எப்படி ? ” நான் கேட்டவுடன் அவருக்கு மீண்டும் சிரிப்பு. ஆனால் இந்த முறை கொஞ்சம் பெருமை கலந்த சிரிப்பு.
” ஹஹஹ .. அது என்னாச்சுன்னா … ஒரு தடவை ரியல் எஸ்டேட் ஆட்கள் எல்லாம் உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க. நான் நம்ம வேலையை பார்த்துக்கிட்டே அவர்கள் பேசறதை கேட்டேன். இங்க ஒரு இடம். அதை மொத்தமா வாங்கி வித்து …என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் நஷ்டத்தில் இருந்தாலும் கொஞ்சம் கடன் வாங்கினா அந்த இடத்தை வாங்கலாம் னு தோணிச்சு. கடை வருமானத்தை வச்சு எப்படியாவது கட்டிடலாம் னு தோணுச்சு. கடனை உடன வாங்கி வாங்கினேன். கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் 20 மாதத்தில கடனை கட்டி முடிச்சேன். அப்போ Real Estate நல்லா இருந்துச்சு. நான் வாக்கியதில் பாதியை ஒருவர் நல்ல விலைக்கு கேட்டார். வித்துட்டேன். அதுல வந்த பணத்தில கடனை அடைச்சுட்டேன். ” சொல்லிட்டு சிரிச்சார்.
நானும் சிரித்தேன். சிரித்துக்கொண்டே கேட்டேன்…
” கடன் இன்னும் மூணு மாச அளவுக்கு இருக்குன்னு சொன்னீங்க ? ”
அவரும் சிரித்தார்.
” இல்லை இல்லை. பழைய கடனெல்லாம் முடிச்சிட்டேன். இது மகளின் குழந்தை செலவு கடன். புதுசு. அதை முடிச்சிடலாம். அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. ”
” ஓ அப்படியா ? பரவாயில்லை. இங்க வர்ற மனுஷங்களை பார்த்தே, அவங்க பேசியதை கவனிச்சு, கடனை அடைச்சுட்டீங்க ” ன்னு சொல்லிட்டு அவரை பார்த்தேன்.
” ஆமா… மனுஷங்க அத்தனை பேரும் தகவல்கள் தான். ஒரு தடவை ஒரு Factory GM வந்திருந்தார். Coffee ரொம்ப விரும்பி சாப்பிடுவார். அவர் அவங்க ஆட்களோட பேசும்போது வேலைக்கு ஆள் இல்லை ன்னு சொல்லிட்டுருந்தார். அவரிடம் அப்படியே பேசி மாப்பிள்ளையை அங்கே சேர்த்து விட்டுட்டேன். 12000 சம்பளம். இப்போ நல்லா இருக்காங்க. ”
நான் அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
” இன்னொருக்கா ஒரு பெண்மணி வந்திருந்தாங்க. வீட்டில் இருந்து கொண்டே இந்த Computer மூலமா ஏதோ பயிற்சி பண்ணி சம்பாதிக்கலாம் னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட பேசி மகளை அறிமுகப்படுத்தினேன். மகள் நல்லா படிப்பா. என்னால படிக்க வைக்க முடியாம போச்சு. நான் இதை சொன்னதும் கெட்டியா பிடிச்சிட்டா. எம் பொன்னுல்ல ! ஹஹஹ்ஹ .. இப்போ அவளும் வீட்டில் இருந்தே சம்பாதிக்கிறா .. 8 10 வருது ன்னா. ”
நான் பிரமிப்பாக பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மனிதர் தொழிலில் நஷ்டமடைகிறார். கடன் வாங்கி தேநீர் கடை வைக்கிறார். கடனை அடைத்துக்கொண்டே கடைக்கு வரும் மனிதர்களை கவனிக்கிறார். அவர்களின் பேச்சுக்களில் தன் கஷ்டங்களை தீர்க்கும் நுணுக்கங்களை கண்டுபிடிக்கிறார். இடம் வாங்கி விற்று நஷ்டத்தை மீட்டெடுக்கிறார். மருமகன் மகள் என்று எல்லோருக்கும் அடுத்த வாழ்க்கையை உருவாக்குகிறார். என்ன ஒரு ஆளுமை !
” எப்படி இப்படி … உங்களை பார்க்கும்போது பெருமையா இருக்கு. ” சொல்லிட்டு எழுந்தேன்.
” அதாவது பழைய கடனெல்லாம் முடிஞ்சது. புது கடன் தான். இன்னும் மூணு மாசம். அப்புறம் மீண்டும் கடன் வாங்க நினைக்கிறேன். ஒரு பேங்க் மேனேஜர் இங்க வருவார். அவரிடம் கேட்டிருக்கேன். அவருக்கு நான் போடற டீ பிடிக்கும். கடன் வாங்கிக்க சொல்லிட்டார். இங்கிருந்து கொஞ்ச தூரத்தில … வாங்கின அந்த சொந்த இடத்தில ஒரு கடையை கட்டிடனும் னு நினைக்கிறேன். அதிகபட்சம் 10 மாதத்தில் இதெல்லாம் நடக்கும். நம்ம கடைக்கு மனுஷங்க வர்ற வரை எனக்கு கவலை இல்லை. அவங்க எனக்கு தேவையானவற்றை சொல்லிட்டே இருப்பாங்க ” சிரித்துக்கொண்டே சொல்லிக்கொண்டு இருந்தார்.
இந்த மனிதருக்கு மனிதர்கள் மேல் என்ன ஒரு அசாத்திய நம்பிக்கை.
” அதாவது சார் .. நம்மளை நோக்கி செய்திகளை மனிதர்கள் சொல்லிட்டே இருக்காங்க. நாம கவனிக்கணும். கவனிச்சா முன்னேறலாம். இதோ என் கூடவே பக்கத்தில ஒருத்தன் கடையை வச்சான். மனுஷங்களை கவனிக்க மாட்டான். கடையை மூடியதும் குடிக்க போயிடுவான். இன்னைக்கு கடையவே மூடிட்டு போயிட்டான். அவனுக்கும் சொன்னேன். மனிதர்கள் சொல்லும் செய்தியை கவனி ன்னு. கேட்டா தான ? ”
நான் ப்ளாக் காஃபிக்கு பணம் கொடுத்திட்டு கிளம்ப தயாரானேன்.
” சார். அந்த ப்ளாக் காஃபியில சர்க்கரையை ஏன் போடுறதில்லை ? ” என்று கேட்ட அந்த மனிதனை மீண்டும் கவனித்தேன். இதுதான் இதுதான் இந்த மனிதனின் வெற்றிக்கு காரணம். மனிதர்களை நுணுக்கமாக கவனித்து, அவர்களிடம் இருந்து தகவல்களை பெறுவது.
சர்க்கரை ஏன் போடக்கூடாது என்பதன் காரணங்களை சொன்னேன். மெதுவாக கேட்டுவிட்டு சொன்னார்…
” அய்யய்ய … இவ்ளோ பிரச்சினை இருக்கா இதுல ? தெரியாம போச்சே சார் ….இன்னையோட நிறுத்திட வேண்டியதுதான். ரொம்ப நன்றி சார் ” என்று சொன்ன அந்த மனிதனை வியந்து பார்த்தேன்.
கற்றல் தான் எவ்வளவு பெரிய பலம் !
முகப்புக் கோட்டோவியம்: சிவதர்ஷிகா கல்கி