அசைவறு மதி 20
எனக்கு தொழில்முறையில் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். ஒருமுறை அவரும் அவருடன் படித்த நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறிய கெட் டுகெதர் க்கு ஏற்பாடு செய்வதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். ஏற்பாட்டாளர்களில் முக்கிய காரியகர்த்தா அவர்தானாம். ஊட்டியில் தான் சந்திப்பு. ஒரு வேன் ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். அதில் பார்க்கப் படங்களைத் தேடிக்கொண்டிருந்தார். பாடல்கள் உள்ள பென் ட்ரைவ் தயார் செய்து வைத்திருந்தார். எங்குலாம் வண்டி நிறுத்தலாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். எந்தெந்த உணவகங்கள் நன்றாக இருக்கும் என்று விசாரித்துக்கொண்டிருந்தார்.
என்றைக்குப் போகிறீர்கள் என்று கேட்டேன்
இன்னும் தேதி முடிவாகவில்லை என்றார். தேதி முடிவாகவில்லை என்றால் தங்குமிடம் உறுதியாகவில்லை என்று தானே அர்த்தம். அதற்கும் அவர் ஆம் என்றார். சில நண்பர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. இலக்கு என்று ஒன்று இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். அதை நோக்கி நகர்வதாய் நினைத்துக்கொள்வார்கள். அது வேறு ஒரு திசையில் செல்லும். நேர விரயம் ஆகிக்கொண்டிருக்கும். கடைசியில் அந்த நண்பர் அந்த கெட் டுகெதரை ஏற்பாடு செய்யவில்லை. ஓர் இலக்கு ஒன்று வைத்துக்கொண்டால் அதை அடைய எப்படியெல்லாம் திட்டம் தீட்டுவோம். திட்டம் தீட்டுவதில் கூட இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று: இலக்கை நோக்கிய நம் நகர்தல் பற்றிய சிந்தனை.
இரண்டு: விளைவை நோக்கி மட்டும் நகரும் சிந்தனை. (இந்த இடத்தில் கொஞ்சம் உங்களுக்குத் தலை சுற்றுவது எனக்கு தெரிகிறது) ‘அசைவறுமதி’ தொடரின் நோக்கம் வாசிப்புப் பழக்கம் இல்லாதோருக்கும் அயற்சி இல்லாவண்ணம் கருத்துகளைச் சொல்லவேண்டும் என்பது தான். ஆனால் தன்னம்பிக்கைத் தொடர்கள் மிகவும் வறட்சியான பிரிவு வகையைச் சார்ந்தவை.கட்டுரையின் முதல் வரியிலிருந்தே ஒருவனை மோட்டிவேட் செய்தாக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு எழுதப்படுபவை அவை. ஆதலால் இந்தப் பகுதி கொஞ்சம் வறட்சி கூடுதலாக இருக்கலாம். ஆதலால் தான் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டுமெனக் கதைகளையும் உதாரணங்களையும் பயன்படுத்துவது.
அந்த நபர் ஊட்டி செல்லவேண்டும் என்பதை (CASE STUDY) உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு வகையில் அந்தத் திட்டத்தைப் பிரிக்கலாம்.
ஒன்று: ஊட்டிக்கு எப்படிச் செல்லலாம், எந்த வண்டியில் செல்லலாம். எப்பொழுது கிளம்பலாம், பாட்டு, படம் , சாப்பாடு, உணவகம் இப்படி போகும் வழி பற்றிய சிந்தனைகளைச் சேகரித்துகொண்டே இலக்கு நோக்கி நகர்வது.
இதில் சில PLUS ( நேர்மறை ) விசயங்கள் உண்டு. என்ன என்றால் ஊட்டி போவதற்கான அதாவது இலக்கை நோக்கி நகர்வதற்கான எண்ணங்கள் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். போகும் வழிக்கானத் திட்டமிடல் அது பற்றிய (VISUALISATION) காட்சிப்படுத்தும் அல்லது கற்பனை செய்துபார்க்கும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும்.
இருந்தாலும் ஒரு சில எதிர்மறை (MINUS) விசயங்களும் உண்டு.
ஒரு வேளை நீங்கள் வண்டி ஏற்பாடு செய்யும்பொழுது நீங்கள் எதிர்பார்த்த வண்டி கிடைக்கவில்லை என்றாலோ , போகும் பாதை மாற்றப்பட்டிருந்தாலோ நீங்கள் அங்கு ஸ்தம்பிக்க வாய்ப்பு இருக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பன் போகும் வழியில் இந்தப் படம் தான் வேண்டும் எனக் கேட்டு டிரைவரைப் புக் செய்திருந்தான். அந்தப் படம் இல்லை என வண்டியை மாற்றிய கதை உண்டு.
இன்னொன்று, நீங்கள் ஊட்டி செல்வதற்கானத் திட்டமிடலில், வண்டி, பாதை, உணவகம் இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிடுதலில் அக்கறையோ ஆர்வமோ இல்லாதவராய் இருந்துவிட்டாலும் பிரச்சினை உருவாகும்.
புரியும்படி சொல்லவேண்டும் என்றால், உங்களால் ஒரு வண்டிக்காரரிடம் பேரம் பேசி வண்டி ஏற்பாடு செய்யத்தெரியவில்லை என்றால் அந்த வேலையில் சுணக்கம் காட்டுவீர்கள். இப்படியான பல பிரச்சினைகள் உண்டு.
இது எல்லாம் ஊட்டிக்குச் செல்லும் திட்டத்தில் முதல் வகை. அதாவது நான் சொன்ன “இலக்கை நோக்கி நம் நகர்தல் பற்றிய சிந்தனை”
இரண்டாவது: ஊட்டிக்குச் செல்கிறோம். அதாவது ஊட்டிக்குச் சென்றே ஆக வேண்டும். எப்படியாவது ஆயினும் சென்றே ஆகவேண்டும். இது இரண்டாவது வகையான “விளைவை நோக்கி மட்டும் நாம் நகர்தல் பற்றிய சிந்தனை”. தமிழில் சொன்னால் நம் சில இளைஞர்களுக்குப் புரியாது. RESULT ORIENTED என்று சொன்னால் புரியும்.
“விளைபலன் நோக்கி நகர்தல்” என்று எடுத்துக்கொள்ளலாம்.
முதல் வகைக்கும் இரண்டாம் வகைக்கும் வித்தியாசம் ஒன்று தான்.
முதல் வகையில் இப்படி போகவேண்டும். இங்கிருந்து போக வேண்டும். இந்த நேரத்தில் போகவேண்டும் என்ற பல திட்டங்கள் கட்டுக்கோப்பாய் இருக்கும். எங்குவேண்டுமானாலும் சொதப்பலாம். தடுமாறலாம். நிதானித்துப் பிறகு மீளலாம்.
ஆனால் இரண்டாம் வகையில் எப்படினாலும் கிளம்பு, என்ன திட்டம்னாலும் போட்டுக்கோ, ஊட்டி போயே ஆகனும் அது தான் இலக்கு. இந்த வகையிலும் நாம் சொதப்பலாம். ஆனால் தடுமாறுதல் இருப்பதில்லை. ஒரே இலட்சியம் இலக்கு தான். அடுத்து என்ன என்று இலக்கு நோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம். மீண்டுகொண்டே இருப்போம்.
பல கார்ப்பரேட் கம்பெனிகள் இரண்டாம் வகையைத்தான் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாய் செயல்படுகின்றன.
இரண்டாம் வகையில் ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு திட்டம் தோல்வியடைந்தால் இன்னொரு திட்டம் உடனே பிறக்கும். ப்ளான் A தோற்றால் ப்ளான் B. இப்படித்தான் சில மார்க்கெட்டிங்க் மீட்டிங்குகள் நடக்கும். மீட்டிங்க் ஆரம்பிக்கையிலேயே இலக்கு வைத்துவிடுவார்கள். எப்படி அதை அடைவோம் என்று விவாதிப்பார்கள். முதல் திட்டம் தோற்றால் அடுத்த திட்டம் என்ன என்று இலக்கு வைக்கும்பொழுதே பேசிவிடுவார்கள். அது தான் இந்த வகையில் சிறப்பு.
வீட்டு பெண்களிடம் இந்த இரண்டாம் வகை குணம் உண்டு. உங்கள் அம்மாவிடம் இன்று சென்று எனக்கு முட்டைப் பொரியல் வேண்டும் வைத்துக்கொடு என்று கேட்டுப்பாருங்கள். முட்டை இல்லையேடா, வெங்காயம் இல்லையேடா, எண்ணெய் இல்லையே, பச்சை மிளகாய் இல்லையே என்று புலம்பலைச் சொன்னாலும் முட்டைப் பொரியல் வைத்துவிடுவார் அம்மா. ஏனென்றால் இலக்கு , முட்டைப் பொரியல். எது இல்லையோ அது கிடைக்கப்பெறும்.
சிலர் வீடுகளில் திடீரென ஆண்கள் கிளம்புவார்கள், உடனே அந்த வீட்டுப் பெண்கள் தடபுடலாய் அடுப்பறையை அரட்டி எதையாவது சாப்பிட தந்துவிடுவார்கள். இலக்கு ஒன்று தான் , சாப்பாடு ஏற்பாடு செய்யவேண்டும் அவ்வளவே. அதுதான் ‘விளைபலன் நோக்கி நகர்தல்” ‘RESULT ORIENTED’ .
சில நிறுவனங்களில் இரண்டு விதமான தலைமைகள் அபூர்வமாய் அமைவதுண்டு. கிரிக்கெட்டில் சச்சின்-கங்குலி , அல்லது சச்சின்-சேவக் மாதிரியான இணைகள்.
நான் அப்படியான தலைமைகள் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறேன்.
ஒருவர், மெடிக்கல் ரெப்களைச் சந்திக்கும்பொழுதெல்லாம் என்னப்பா டார்கெட் முடிச்சிருவியா, எவ்வளவு சேல் பண்ணுவ என்பார்.
இன்னொருவர், மெடிக்கல் ரெப்களைப் பார்க்கும்பொழுது எந்த டாக்டர் எந்த மருந்தை எழுதுகிறார், எப்படி எழுத வைப்பாய், எப்படி சேல் எடுப்ப, ஒரு நாளைக்கு எத்தனை டாக்டர் பார்க்கிறாய் , உன்னிடம் சேம்பிள் இருக்கிறதா இப்படியான கேள்விகளைக் கேட்பார்.
ஒருவர் அடாவடித்தனமான சேல் பற்றி. அதாவது RESULT ORIENTED விளைபலன் நோக்கி நகரக் கேட்பார்.
இன்னொருவர் நம் திட்டங்களைக்கொண்டு நகர்தல் பற்றிக் கேட்பார்.
விளைபலன் நோக்கி நகர்தலில் உங்களுக்கு ஒரு தளர்வு கிடைக்கும். காரணம் உங்களுக்கானச் சுதந்திரம். உங்கள் திட்டங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ளலாம்.
திக் நாட் ஹன் எழுதிய ‘ நினைவாற்றலின் இரகசியம்’ என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் ஒரு கதை போன்ற இரு நண்பர்களுடனான உரையாடல் இருக்கிறது. அதைத் தற்போது படிக்க நேர்ந்தது. அந்த உரையாடல் சொன்ன விசயம் வேறு. அதை அசைவறுமதிக்காக வேறுவிதமானக்கோணத்தில் சொல்கிறேன்.
ஹன்னிற்கு ஜிம் என்று ஒரு நண்பர் இருக்கிறார். சில சமயங்களில் மாலை நேரத்தில் ஒன்றாய் இவரின் வீட்டில் அமர்ந்துகொண்டு நேரம் செலவழிப்பார்கள். காலையிலிருந்து தானாகவே சமைத்த பாத்திரங்கள் அப்படியே கழுவாமல் இருக்கும். அதை ஹன் மாலையில் கழுவி முடித்துவிட்டுப் பிறகு அனைவருடனும் சேர்ந்து ஒரு நல்ல டீ போட்டு சாப்பிடுவது வழக்கம்.
ஒரு முறை நண்பராக வீட்டிற்கு வந்த ஜிம், இன்று பாத்திரங்களை நான் கழுவுகிறேன் என் கிறார். வேண்டாம் என மறுக்க, ஜிம் விடாப்பிடியாய் பாத்திரங்களைக் கழுவ அனுமதி கேட்கிறார்.
அப்படியானால் பாத்திரங்களைக் கழுவத்தெரியுமா என்று கேட்கிறார் ஹன்.
ஏன், எனக்குப் பாத்திரங்களைக் கழுவத் தெரியாது என்று நினைக்கிறாயா? என் கிறார் ஜிம்.
இல்லை பாத்திரங்கள் கழுவுவதில் இரண்டு விதங்கள் உள்ளன.
ஒன்று: பாத்திரங்கள் சுத்தமாக இருக்கவேண்டும் , அதனால் கழுவ வேண்டும்.
இரண்டு: பாத்திரங்களைக் கழுவியாக வேண்டும் அதனால் கழுவவேண்டும். என் கிறார் ஹன்.
ஜிம் இரண்டாம் வகையைத் தான் தன் மனதில் எடுத்துள்ளதாகவும் அது போல் கழுவிவிடுவதாகவும் கூறுகிறார்.
தினமுமான இப்படியானச் சந்திப்புகளில் ஜிம் தான் பாத்திரங்களைக் கழுவுகிறார். மெல்ல பாத்திரங்களைக் கழுவும் பொறுப்பை ஹன் ,ஜிம்மிற்குக் கொடுக்கிறார்.
பாத்திரங்களைக் கழுவிய பிறகு தான் டீ.
பாத்திரங்களைக் கழுவி முடித்தபின் தான் டீ.
பாத்திரங்களைக் கழுவா விட்டால் டீ இல்லை.
பாத்திரங்களைக் கழுவத் தாமதம் ஆனால் டீயும் தாமதம் ஆகும்.
ஜிம் மெதுவாக பாத்திரங்களைக் கழுவுவதற்காகக் கழுவுதல் என்பதிலிருந்து பாத்திரங்கள் சுத்தமாக இருந்தால் தான் அடுத்த உபயோகப்படுத்தமுடியும் என்று புரிந்துகொள்கிறார்.
ஆரம்பக்கட்டங்களில் வாஷ்பேசின் பக்கத்தில் நிற்பதையும் பாத்திரம் கழுவும் சிரத்தையையும் உணர முடிந்த ஜிம்மால் பின் நாட்களில் வாஷ்பேசின் பக்கத்தில் நிற்பதை உணரமுடியாமல் பாத்திரங்கள் கழுவி ஆகவேண்டும் என்ற நிலைக்கு நகர்கிறார். டீ என்பது இலக்கு.
இந்த உரையாடலில் நாம் தெரிந்துகொள்வது ஒன்று .
நாம் இலக்கு நோக்கி நகர்தல் பற்றிய சிந்தனையுடன் திட்டம் தீட்டினால் நமக்கு அயற்சி(BORING) உணர்வு உண்டாகலாம்.
நாம் விளைபலன் நோக்கி நகரும் சிந்தனையுடன் செயல்பட்டால் வேகமாகச் செயல்பட ஆரம்பிப்போம். அயற்சியுறுவதற்கு வாய்ப்புகள் குறைவாயிருக்கலாம்.
முகநூலில் ஒரு தோழி ஒரு ஸ்டேடஸ் பதிந்திருந்தார், “உனக்கு தான் வாஷிங்பேசின்ல கடக்குறது பாத்திரம், எனக்கு அது பத்து இளையராஜா பாட்டு” என்று.
எப்பொழுதும் விளைபலன் நோக்கிய சிந்தனை கொள்ளுங்கள். அசைவறு மதி சுவாரஸ்யமாய் வேலை பார்க்கும்….
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
- "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
- நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
- யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
- தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
- உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
- குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
- உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
- தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
- கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
- பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
- நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
- உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
- ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
- 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
- இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
- ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்