2.அசைவறு மதி

துரோணர் தன் மாணவர்களுக்கு வழங்கியச் சோதனைகளையும் அதன்மூலம் நிபுணத்துவத்தைக் கண்டறிதல் பற்றியக் கதையைக் கேட்டிருப்போம். கிளையில் அமர்ந்திருந்த கிளியைக் காட்டி குறிபார்க்கச் சொல்ல அர்ச்சுனன் மட்டும் கிளியின் கழுத்து தெரிகிறது என்கிறான். மரமோ கிளையோ இறகோ என எதுவும் இடையூறு ஆகாமல் கழுத்தில் குறிவைத்தான் அர்ச்சுனன். துரோணர் வில்லுக்கு விசயன் என முடிவுசெய்கிறார். ஒருவருக்குத் தன் பலம் எதில் என்பதைத் தானே கண்டறிவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. எதில் நம் ஆர்வம் செல்கிறதோ எதில் நம் மனநிலையை, மனப்பார்வையை நிலையாக வைக்கிறோமோ அங்கு நாம் வலிமை பெறுகிறோம். வேறுமாதிரியாகச் சொல்லவேண்டும் என்றால் எங்கு நாம் வலிமை பெற நினைக்கிறோமோ அங்கு ஆர்வத்தைச் செலுத்துவது.
மனப் பார்வையைக் குவிப்பது.

அது என்ன மனப்பார்வை. தலைப்பையே வைத்துக்கொள்ளலாம் அசைவறுமதி. எங்கு அல்லது எதில் நிபுணத்துவம் பெற விரும்புகிறோமோ அங்கு நிலையாக நம் மனத்தோடு எந்த மனச்சிதறலுக்கும் உள்ளாகாமல் அசைவறுமதியுடன் நிலைகொண்டோம் என்றால் நிபுணத்துவம் பெறுகிறோம்.

பொதுவானச் சூத்திரப்படி நாம் எதைத் தேடுகிறோமோ அது நம்மைத் தேடி வரும் என்பது பலரின் கருத்து. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருப்பது பலரின் நம்பிக்கை. நாம் நம் எண்ணங்களைப் பெரும்தேடலாக அதிர்வுறச் செய்ய இந்தப் பிரபஞ்சத்தின் அலை அந்த அதிர்வுகளைப் பெற்று நம் எண்ணம் ஈடேறுவதற்கானப் பல சாத்தியக்கூறுகளை நம்முன் கொண்டுவரும். இது எல்லாம் அசைவறு மதி கொள்வதனால் விளையும் நன்மை.

வெறும் நம்பிக்கையை வைத்தோ சூத்திரங்களை வைத்தோ எதார்த்தங்கள் இருப்பதில்லை.

இப்பொழுது உதாரணமாக சில விசயங்களைப் பார்க்கலாம்.

நீங்கள் ஓர் இரு சக்கரவண்டி வாங்க நினைக்கிறீர்கள். உங்கள் கையிலிருக்கும் வண்டியை மாற்றிவிட்டு புதுவண்டி வாங்க திட்டம்.

வண்டிகளைப் பற்றி விசாரிக்கிறீர்கள். உங்களுக்கு புல்லட் வாங்க ஆசை. புல்லட் வண்டி எவ்வளவு என்று விசாரிக்கிறீர்கள். நீங்களே கவனிக்கலாம். சாலையில் புல்லட் வண்டிகளாகவே கண்ணில் படும். புல்லட் சத்தம் கேட்டு திரும்புவீர்கள். நாளிதழில் புல்லட் வாங்கும் சலுகை விளம்பரங்கள் கண்ணில் படும். சினிமா படங்களில் நாயகர்கள் ஓட்டும் வண்டியைப் பார்ப்பீர்கள். புல்லட் வண்டிகள் இவ்வளவு ஓடுகின்றனவா என்று கேட்டுக்கொள்வீர்கள். உண்மையில் எப்பொழுதும்போல்தான் வண்டிகள் ஓடுகின்றன. உங்கள் தேடலும் அதன்பால் நீங்கள் நிலைநிறுத்திய உங்கள் அசைவறுமதியும்தான் உங்கள் தேடலைச் சாத்தியப்படுத்துகின்றன.

எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

எங்கு அசைவுகளற்று நம் மனப்பார்வையை நம் எண்ணத்தை நம் அசைவறுமதியை நிலைநிறுத்துகிறோமோ அங்கு அது சாத்தியப்படுகிறது. ஒரு விசயத்தை நாம் செயல்படுத்துவதற்கு பல காரணிகள் இடையூறாய் சொல்லலாம். ஆனால் அதைச் செயல்படுத்த ஒரே காரணி நாம்தான்.

ஒரு விசயம் நடைபெறாமல் போவதற்குப் பல காரணங்களை நாம் பட்டியலிடுவோம். உண்மையைச் சொல்லப்போனால் வெற்றி பெறுவதற்குக் காரணமாக நாம் இருப்பதைவிட ஒரு விசயம் தோல்வி அடைய நாம்தாம் காரணமாக இருப்போம். ஆனால் வெற்றிக்கு நம்மை, நம் உழைப்பைக் காரணப்படுத்துவதைப்போல் நம் தோல்விக்கு நம்மை, நாம் கொடுக்கத் தவறிய உழைப்பு பற்றிப் பேச மாட்டோம்தானே.

வியாபாரத்துறையில் நிறுவனங்கள் பிரதிநிதிகளுக்குப் பல பயிற்சிகளை அளிக்கும். முதலில் எந்தப் பொருளை அந்த நிறுவனம் விற்கிறதோ அதைப் பற்றி product details. உதாரணத்திற்கு மெடிக்கல் ரெப்களுக்கு மருந்துகளைப் பற்றிய அறிவியல், நோயைப் பற்றிய தகவல்கள் பிறகு நம் மருந்தை மருத்துவர்களுக்கு எப்படி promote செய்வது என்று.

பள்ளிக்கூடக் குழந்தைகள்போல் பிரதிநிதிகளை மனப்பாடம் செய்யவைத்து ஒப்பிக்கவைத்து அவர்களது உடல்மொழி பேச்சுமொழி என எல்லாவற்றையும் திருத்தம் செய்வார்கள்.

இதில் பல பிரதிநிதிகள் தாக்குப் பிடிக்காமல் ஓடிவிடுவார்கள். நான் ஒரு நிறுவனத்தில் பயிற்சியில் இருந்தபோது புஜ்ஜுவால் என்று பயிற்சியாளர். பெரிய நிறுவனங்களில் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென்றே பிரத்யேக பயிற்சியாளரை வைத்திருப்பர். அவர்கள்பற்றிய ஓர் அடையாளத்தை உங்கள் மனதில் ஏற்படுத்தவேண்டும் என்றால் நம் பள்ளிக்கூடங்களில் இருக்கும் p.e.t உடற்பயிற்சி ஆசிரியர்களின் தொணியில் இருப்பர். புஜ்ஜிவால் பெயர்தான் பெண்களைக் கொஞ்சும் செல்லப்பெயரால் இருந்தது. மனிதர் சராசரி உயரம். படு ஒல்லி. வழுக்கைத் தலை. ஈட்டி மீசை. வடக்கத்தியர் மாதிரியே தெரியாது. நம்மூர் பக்கம் ஏதோ கோவில்பட்டிக்காரர் மாதிரி இருப்பார்.

முதல் நாள் நடத்துவதை அடுத்தநாள் ஒப்பித்துவிட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும். ஒப்பிக்காதவர்களுக்கு தினமும் மாலை ஸ்பெஷல் க்ளாஸ் வைத்து ஒப்பித்து முடித்தப் பிறகுதான் அறைக்குத் திரும்பமுடியும். அவர் சொல்லித்தருவதைப்போல்தான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு ஒரு டானிக் மருந்து. அதை மருத்துவர்களுக்குச் சொல்லும்பொழுது மருத்துவர் குறுக்கீட்டு என்ன விலை என்று கேட்பார். நாம் மருந்துகளின் அறிவியலைப் போன்று விலையையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கவேண்டும். அதை அப்படியே சொல்லிவிடக்கூடாது. புஜ்ஜு சொன்ன பயிற்சியின்படி, மிக்க நன்றி டாக்டர், நீங்கள் இந்த மருந்தின் (மருந்தின் பெயர்) விலையைக் கேட்பதால் நீங்கள் எங்களுக்கு இந்த மருந்தை சப்போர்ட் செய்ய நினைக்கிறீர்கள் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதன் விலை மிக அதிகம் இல்லை. இவ்வளவு எனக் கூற வேண்டும்.

ஒரு மருந்தின் விலையை ஒருவர் கேட்டால் எடுத்த எடுப்பில் எண்பது நூறு என ஏலம் விடமுடியாது. புஜ்ஜு சொல்லிக்கொடுத்ததை ஆங்கிலத்தில் அச்சுப்பிசகாமல் சொல்லவேண்டும். அதுவே பயிற்சி. காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு வரை வகுப்பு. சரியாக ஒப்பிக்காதவர்களுக்கு எட்டு மணியிலிருந்து ஒப்பித்து முடிக்கும்வரை அல்லது புஜ்ஜுவாலுக்குத் தூக்கம் வரும்வரை. இதில் இரவு அறையில் படிக்கிறோமா என்று ஆய்வு வேறு வருவார்.

ஒருநாள் இரவு பத்துமணிக்கு நான் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் புனேவைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கியிருந்தனர். அவர்கள் அறைக்கு இண்டர்காமில் புஜ்ஜுவால் அழைத்து என்ன செய்கிறீர்கள் படிக்கிறீர்களா டிவி பார்க்கிறீர்களா எனக் குசலம் விசாரிக்க அவர்களும் படிக்கிறோம் எனக்கூற ஒரு மருந்தின் பெயரைச்சொல்லி இது எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். பேசிய அவசரக்கொடுக்கை எண்பது ஓவாய் என ஏலமிட புஜ்ஜு அவனை இண்டர்காமிலேயே துவம்சம் செய்து அறைக்கு வரவழைத்து இரவு ஒரு மணிவரை பயிற்சிக் கொடுத்தார். இதற்குப் பெயர்தான் நடுராத்திரியில் எழுப்பிக்கேட்டாலும் சொல்லவேண்டும் என்பது என்று அன்றுதான் எங்களுக்குத் தெரிந்தது.

உண்மையில் ஒரு தொழிலில் நிபுணத்துவம் பெறவேண்டுமென்றால் அதன் அடிப்படையை நாம் கற்றுத் தேறவேண்டும். எந்த அயர்ச்சியுமற்று அதன் நெளிவுசுளிவுகளை ஆராயவேண்டும். பெரும்பாலான வெற்றிகளுக்கு அடிப்படையே, அடிப்படையானப் பல விசயங்களைக் கற்றுத் தேர்வதுதான்.

அடிப்படையான பல விசயக்களைக் கற்றுத் தேற தேவைப்படுவது ஒன்றுதான். அது

அசைவறு மதி.

முந்தைய தொடர்:

1. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் உயிர்ப்பு இருக்கிறது – https://bit.ly/393NmHE

 

தொடரும்…

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
  6. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  7. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  8. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  9. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  10. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  11. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  12. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  13. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  14. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  15. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  16. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்