அசைவறு மதி 16

ஒவ்வொருத்தரும் கொரோனோ விடுமுறை என்று ஊரடங்கில் வீட்டில் இருக்கும் காலகட்டத்தில் ,சமூக வலைதளத்தில் ஆங்காங்கே சில விளையாட்டுகள் நடக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு வேட்டி சேலன்ஜ் , சேலை சேலஞ்ச் இப்படி பல நிகழ்வுகள். அதாவது ஆண் ஒருவர் வேட்டி கட்டிக்கொண்டு அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு தன்னுடைய நண்பரை இப்படிச் செய்து பார் என்பார்.

சில நண்பர்கள் கூட பிடித்த திரைப் படங்களைச் சொல்லி பதிவிட்டு அவர்களது நண்பர்களைத் தொடரச்சொல்லி அழைத்திருக்கின்றனர். அந்த நண்பர்களும் அவர்களுக்குப் பிடித்த திரைப்படங்களைக் குறிப்பிட்டு அவர்கள் அவரகளது வேறு சில நண்பர்களை அழைக்கிறார்கள்.

சில நண்பர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களைக் குறிப்பிட்டு , நண்பர்களும் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களைக் குறிப்பிட அழைக்கின்றனர். அவர்கள் இது சார்பான உரையாடல்களை நிகழ்த்துகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு சுவாரஸ்யம் நடந்தது. கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் ஒரு வீட்டு மாடியில் , இந்தக் கொரோனா ஊரடங்கு நாளில் வீட்டில் இருந்துகொண்டு bating practice  செய்யலாம் என பேட்டைத் திருப்பி, அதாவது பேட்டின் மத்தியில் பந்தைத் தட்டாமல், பேட்டின் விளிம்பில் பந்தைத் தட்டி தட்டி , இது போல் நீங்கள் செய்யுங்கள் பார்க்கலாம் என சில நண்பர்களை அழைத்திருந்தார். அவர் அழைத்த நண்பர்கள் வேறு யாரும் அல்ல,  சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா , ஹர்பஜன் சிங்.

இதற்கு சச்சின் டெண்டுல்கர் புரிந்த எதிர்வினை தான் ட்விஸ்ட். யுவராஜ் செய்ததையே சச்சினும் செய்தார். மிகவும் எளிதான டேஸ்க்கைக் கொடுத்துவிட்டாய் நண்பா, இதை இப்படிச் செய்து பார் என்று தனக்கு வந்த டேஸ்க்கை யுவராஜ்ஜிற்குத் திருப்பிவிட்டிருக்கிறார். எப்படி என்றால், யுவராஜ் பேட்டின் விளிம்பில் பந்தைத் தட்டி தட்டி பயிற்சி செய்ததைப் போலவே சச்சினும் செய்தார். ஆனால் கண்களைக் கட்டிக் கொண்டு பேட்டின் விளிம்பில் பந்தைத் தட்டி தட்டி பயிற்சி செய்து பதிவிட்டுள்ளார்.  இப்பொழுது யுவராஜ்ஜிற்கு அதைத் திருப்பி விட்டிருக்கிறார்.

உண்மையில் வெற்றிகரமாய் இயங்குபவர்களின் வாழ்க்கை தான் நமக்குப் பாடமாக பல சமயங்களில அமையும். வாரன் பஃபட் என்று பெரிய பணக்காரர் இருக்கிறார். கேள்வி பட்டிருப்பீர்கள். தினமும் வாரன் பஃபட் எந்தெந்த பங்கில் முதலீடு செய்கிறார் என்று பார்த்து அந்தந்தப் பங்கில் முதலீடு செய்து லாபம் பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறதாம். அவர்கள் சொல்கிறார்கள், அவர்களுக்கென்று எந்த ஹோம்வொர்க்கும் கிடையாதாம். அவர்கள் செய்வது வாரன் பஃபட்  என்ன செய்கிறாரோ அதைச் செய்வது. அதுவே கொள்ளை லாபத்தைத் தருகிறதாம்.வெற்றிகரமாய் இருப்பவர்கள் நமக்கு அவர்களின் வாழ்வியல் முறைகளின் மூலம் நமக்குச் சில அடிப்படை வாழ்வியல் முறைகளைச் சொல்லிக்கொடுப்பர். நாம் அவற்றைஅடையாளம் காணவேண்டும். அது மட்டும் தான் நம் வேலை.

உதாரணத்திற்கு, சச்சினின் இந்தச் செயலை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒருவர் ஒரு படத்தின் பெயரைப் போட்டு, நண்பா நீயும் தொடர்ந்து பதிவிடு என்றதும் நாமும் அப்படிச் செய்கிறோம். அதுபோல ஒரு சாஸ்திர சம்பிரதாயத்திற்கு யுவராஜ் செய்வதைப் போல சச்சினும் செய்து காண்பித்திருக்கலாம். இல்லாவிட்டால், நமக்கு இதில் ஆர்வம் இல்லை என்று சராசரியாக ஒதுங்கியிருக்கலாம்.

ஆனால் சச்சின், செய்தது சுவாரஸ்யம். கண்களைக் கட்டிக்கொண்டு இப்படிச் செய்யலாம் எனச் செய்து பார்க்கிறார். எதற்காக இதைச் செய்ய வேண்டும்.

கண்களைத் திறந்துகொண்டு பேட்டில் பந்தைத் தட்டி தட்டி விளையாடுவதும் ஓர் ஆர்வம் தானே, அதிலும் ஒரு சவால். சவால் னா இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு பிடிப்பு. அதுவே சச்சின். சச்சினிற்கு தன் இலக்குகளை உயரமாகவே வைத்து பழகிவிட்டது.

நீங்கள் மிகவும் இலகுவாய் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அது நோக்கி நடந்தீர்கள் என்றால், உண்மையில் உங்கள் பலம் என்ன என்றே தெரியாமல் போய்விடும். சச்சினின் சாதனை பயணங்களைப் பார்த்தீர்கள் என்றால் அவரது இலக்கு தான் அவரை நகர்த்தியிருக்கும். உங்களை இந்த உலகத்தில் நிலை நிறுத்துவது எது என்று நினைக்கிறீர்கள் . நீங்கள் வைத்த இலக்கு தான். உங்கள் இலக்கு தான் நீங்கள்.

விற்பனைத்துறை எனக்கு மிகவும் பிடித்தத்துறை. அதுவும் மருத்துவத்துறை விற்பனையில் இருப்பவர்களுக்கு இலக்கு பற்றி தொடர்ந்து பிரக்ஞை இருந்துகொண்டே இருக்கும். மேலதிகாரிகள் , தங்களுடைய விற்பனை பிரதிநிதிகளை இலக்கு பற்றிய சிந்தனைகளில் அவர்களை உயிர்ப்புடனே வைத்திருப்பர்.

ஒருவன் ஒரு வருடத்தின் இலக்கை (டார்கெட்) முடித்திருப்பான். அவனுக்கு “நீ லாம் நல்லா பண்றவன் பா, நீயே பண்ணலாட்டி வேறு யார் பண்ணுவா “என்று பேசி 25 சதவீத அதிகமான டார்கெட் அடுத்த வருடத்திற்குத் தருவார்கள்.

ஒருவன் ஒரு வருடத்தின் இலக்கை ( டார்கெட்) முடிக்காமல் இருப்பான். அவனுக்கு போன வருடம் தான் சரியா பண்ணல, இந்த வருடமாவது  நல்லா பண்ணு என்று 30 சதவீத டார்கெட் தருவார்கள்.

பொதுவாய் சிந்திப்பது என்ன, அவன் சரியா பண்ணாத பையன். அவனுக்கு டார்கெட் குறைவாய் தரவேண்டும் என்பது தானே. அப்படி அல்ல.  கீழே விழுபவனும் மேலே எழுவதாய் இருக்க வேண்டும் இலக்கு.

கீழே விழுந்தவனுக்கு அதிகமான உயரத்தைத் தாண்டச்சொன்னால் தான் அவனால் குறைந்தபட்சம் எழுந்து நிற்கும் அளவிற்காவது தைரியம் வரும். அதன் சூட்சமம் தான் அது.

இரண்டே நாளில் முடிவு செய்து சம்பளத்திற்கு இருந்த நிறுவனத்தில் இருந்து ஒரு நாள் இரவில் வெளியேறத் துணிந்தேன். அந்த நிதியாண்டு ஏப்ரலிலிருந்து என் புதிய நிறுவனத்திற்கு வேலை பார்க்க ஆரம்பிக்கிறேன். மார்ச் மாதம் கடைசி வாரத்தில் என் பலம் என்ன, என் பொருட்கள் என்ன, என் சந்தை நிலவரம் என்ன என்று யோசித்து என் நிறுவனத்திற்கான இலக்கு கடந்த வருடத்து பார்ட் டைம் மாக வேலை பார்த்து வந்த விற்பனையிலிருந்து  15 சதவீதம் வைக்கிறேன். எனக்கு அதற்கு ஒரு லாஜிக் இருந்தது. இந்தியாவின் மருந்துவிற்பனைத்துறையின் சராசரி வளர்ச்சி வீதம் குறைந்தபட்சம் அவ்வளவு தான் . அதனால் 15 சதவீதம் வளர்ச்சி என்று தீர்மானித்திருந்தேன். எனக்குத் தெரிந்த என் பழைய மேனேஜரை ஏப்ரல் முதல் தேதி ஃபோனில் பேசுகிறேன். நிதியாண்டின் முதல் மாதம் முதல் நாள். நான் வடிவமைத்த இலக்கைப் பெருமையாய்,  15 சதவீத பராக்கிரமங்களைச் சொல்கிறேன். முதன் முதலாய் தொழில் ஆரம்பிப்பவனுக்கு என்ன சராசரி வேண்டியது இருக்கிறது. தொழிலின் ஆரம்பநிலையில் ஓடவில்லை என்றால் என்ன அர்த்தம், இலக்கைக் கூட்டுங்கள் என்றார். மருத்துவ விற்பனைத்துறையில் நான் கற்றுக்கொண்ட பல விசயங்களில் முக்கியமானவை, உழைப்பில் கருணையும், எங்களுக்கு வைத்துக்கொள்ளும் இலக்கில் மனிதத்தன்மையும் காட்டவேகூடாது என்பது தான். பெரிய உயரத்தைத் தொடவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பட்சத்தில் யாரும் நல்ல நேரமோ சகுனமோ தன்னைத் திருத்த யோசித்துப்பார்க்கவோ கூடாது. அந்த அழைப்பைத் துண்டித்த மறுகணம் 30 விழுக்காடு இலக்காய் மாற்றிக்கொண்டேன்.

அப்படித்தான் அந்த வருடத்தைக் கடந்து போயிருந்தோம் என்பது வேறு.

மூன்று தொடர்களில் குறிப்பிட்ட ஒரு வாசகத்தை இங்கும் குறிப்பிடுகிறேன்.

” நாம் இன்று இருப்பது, நேற்றைய எண்ணங்களின் விளைவே” . நமக்கான இலக்கு நாம் நாளை போய் நிற்கும் ஓர் இடம் மட்டும் அல்ல, இன்று நாம் செய்துகொண்டிருக்கும் வேலையின் பிரதிபலிப்பு.

உங்களுக்கு ஒரு வீடு கட்டவேண்டும். எத்தனை வருடத்தில் கட்டவேண்டும் என்று தீர்மானியுங்கள். அதை இன்றே தீர்மானியுங்கள். உங்கள் இலக்கு உங்களை நகர்த்த வேண்டும். படுக்கையறையில் உங்களை இட்டு தூங்கவைப்பது உங்களது இலக்கு அல்ல.

MJ என்பது கூடைப்பந்து ரசிகர்களின் மத்தியில்  கோலோச்சும் பெயர்.மைக்கேல் ஜோர்டன். கூடைப்பந்தில் சாகசங்கள் புரிந்தவர். கூடைப்பந்தில் ப்ரியம் கொண்டு, ஆர்வத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு அணியில் சேர முற்படுகையில் அவரது உயரத்தை ஒரு குறையாகக் கூறி அணியில் சேர்க்கவில்லை. நிராகரிக்கிறார்கள்.

ஆனால் அவர் அணியில் திறமையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு பெரும் சாதனையாளராக மாறிய பிறகு ஒரு பேட்டியில் கூறுகிறார்,  அணியில் என்னை நிராகரித்த போதும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவேன். மிகுந்து களைத்துப்போய் வியர்த்து தளர்ந்து ஓரமாய் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு அந்த அணியனருக்கான ‘lock room’ ஒவ்வொன்றிலும் எல்லா வீரர்களின் பெயர்களும் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் என் பெயர் இருக்கப்போவதில்லை என்பதை நினைப்பேன். அது என் களைப்பை மறந்து பயிற்சியில் ஈடுபடவைக்கும். உடனே எழுந்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பிப்பேன் என்று சொல்கிறார்.

சாதனையாளர்  MJ க்கு முன் அவரது பயிற்சியில் பெரும் இலக்கு ஒன்று குறித்துவைக்கப்பட்டிருந்தது. அவரது பயிற்சி காலத்தில் அவரிடம் இருந்த எண்ணங்களும் இலக்குமே , பிற்காலத்தில் அவரை ஒரு சாதனையாளராக மாற்றின.

பொதுவாகத் தன்னம்பிக்கை கட்டுரை படிப்பதில் ஆர்வத்தைக் கூட்டுவது இப்படி இரண்டு வெற்றியாளர்களின் கதைகளை மசாலா போலத் தூவுவது தான். படிப்பவர்களும் , பரவாயில்லையே, என்ன மனுஷன்யா இந்த மைக்கேல் ஜோர்டன் என்று ஆ கொட்டி விட்டு பாதி பேர் படுத்துவிடுவார்கள். இந்தக் கதைகளைப் படித்து நாம் தெரிந்துகொள்வது என்பது ஒரு செய்தி தான். அதை அல்லது அது போன்று செய்து பார்ப்பது தான் படிப்பதற்கான பயன். வெற்றியாளர்களின் கதைகள் சொல்வதும் படிப்பதும் அவர்களின் உழைப்பை ,அவர்களின் ஆர்வத்தை, அவர்களின் வாழ்வியல் முறைகளை ஆராய்வதற்காகத்தானே ஒழிய நேரத்தைக் கடத்துவதற்காக மட்டும் அல்ல.

நான்கு நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்ட ஒரு உரையாடல் நிகழ்வில் நானும் இருந்தேன். அவர்களுக்கு ஏதாவது சொல்லனும் என்றார்கள். என்னசொல்வது. உங்கள் இலக்கு என்ன என்று கேட்டேன். பெருசா ஒண்ணும் இல்ல சார் என்றார்கள் இருவர். ஒருவருக்கு வீடு கட்ட வேண்டும் என்று இருந்தது. ஒருவருக்கு எப்படியாவது திருமணம் ஆகவேண்டும் என்று மற்ற நண்பர்கள் சொன்னார்கள். அவரும் ஆம் என்று ஆமோதித்தார். இங்கு வீடு கட்டுவதோ , ஒரு துணையைத் தேடுவதோ எதுவோ ஓர் இலக்காய் இருந்துவிட்டுப்போகலாம். இருவர் இலக்கே இல்லை என்று கூறுவது தான் நெருடலாக இருந்தது.  இலக்கு வைத்துக்கொள்வது என்பது கடலின் நடுவில் நின்றுகொண்டு தூரமாய் கலங்கரை வெளிச்சத்தைப் பார்த்து நகர்வது போன்றது.

உங்கள் இலக்கு என்ன என்று எழுதுங்கள்.

அதற்கான நேர நிர்ணயத்தை எழுதி வையுங்கள் அதுதான் இலக்கிற்கான அழகு. கிட்டத்தட்ட அது ஒரு டைம் பாம் போன்று தான். அதுவும் உங்கள் வயிற்றில் கட்டிக்கொண்டது போல் கனக்கச்சிதமான அழகைத்தரும்.

அந்த இலக்கு உங்கள் திறமையின் எல்லைக்குள் இருக்கிறதா இல்லை நீங்கள் எட்டி எட்டிக் குதிக்கிற அளவு உங்கள் திறமையை வளர்ப்பதாய் இருக்கிறதா என்று இன்னொருமுறை பாருங்கள்.

உங்கள் இலக்கை கொஞ்சம் உயரமாகவே வையுங்கள்.

உயரத்திற்குப் போனால் தான் வெற்றியின் பெருவெளியை நீங்கள் காணமுடியும்.

ஒரு பிரபல சொற்றொடர் இருக்கிறது .

SEE YOU AT THE TOP.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
  2. "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
  3. "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
  4. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
  5. தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
  6. உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
  7. குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
  8. உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
  9. தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
  10. கொரோனோ: எல்லோரும் வாழ்வோம் - பழனிக்குமார்
  11. பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
  12. நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
  13. உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
  14. ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
  15. 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
  16. இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
  17. ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்