8. அசைவறு மதி
அசைவறுமதியை எழுதும் இந்த நேரத்தில் இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் ஒரு நண்பர் , ஏன் நீங்க கொரோனா பற்றி எழுதக் கூடாது. தொடரில் கொஞ்சம் லைவாக இருக்குமே என்றார்.முதலில் அதை அவரிடம் நிராகரித்தேன். ஏனென்றால் நிறைய வல்லுனர்கள் கொரோனா பற்றி இந்த உயிர்மை இணையத்திலேயே எழுதுகிறார்கள். மேலும் சமூகவலைதளத்தில் சில நண்பர்கள் எழுதுகிறார்கள். அவர்களிடம் இருந்து வராதத் தகவல்கள்… ஏன், கொரோனாவிற்குக் கூடத் தெரியாத விவரங்களை வாட்சப் மூலமாகப் புரளியாக வேறு சிலர் அனுப்புகிறார்கள். ஆதலால், கொரோனா பற்றி எழுதத்தேவையில்லை என்று அவரிடம் சொல்லியிருந்தேன்.
ஆனால் 19.3.2020 அன்று நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், மக்களிடம் பேசப்போவதாக அறிவிக்கிறார்.அந்த அறிவிப்பிற்குப் பின் என்னைச் சுற்றியுள்ள சமூகம் ஒருவிதச் சலனத்திற்கு உள்ளாவதைக் கண்டுகொண்டேன். பிறகுதான் இதை எழுதிப்பார்க்கத் தோன்றியது. கொரோனா பரவியவிதம், பரவும் விதம், அது சென்ற நாடுகளில் ஏற்பட்ட மரணம் என்ற தரவுகள் எல்லாம் இந்தக் கட்டுரை படிக்கும் தருணத்தில் உங்களை அடைந்திருக்கும்.
ஒரு தொற்று நோய் கிருமி பரவும் வகையில் அதை முதன் முதலில் எதிர்கொண்ட சீனா பிறகு ஈரான், இத்தாலி போன்ற நாடுகளின் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் வதந்திகளும் விழுப்புணர்வுகளும் பரப்பப்பட்டன. நம் நாட்டிற்குள்ளும் இந்த நோய் பரவ ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் ஒரு தேசத்தின் மனநிலை எப்படி இருக்கும்.?அந்த மனநிலை எதை பிரதிபலிக்கும்? அடிப்படையாய் அந்த மனநிலை யாருடைய மனநிலை? ஒரு தேசம் தனது மனநிலையை எப்படி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும்? ஆட்சியாளர்கள் சொல்லும் கருத்துகளை வைத்து மக்கள் எப்படி தன் மனநிலையைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்?
தக்கவைத்துக்கொள்ளுதலுக்கும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளுதலுக்கும் வித்தியாசம் இருக்கிறது.வரலாற்றில் கொடிய நோய் பரவிய காலத்தில் மக்கள் அழிந்த அதே தருணத்தில்தான் சிலர் தப்பித்தும் இருக்கிறார்கள். தப்பித்தவர்களின் மனநிலையை யோசியுங்கள்.பிழைத்தலின் பொருட்டு அவர்கள் எதையோ தேடியிருக்கிறார்கள். ஓடியிருக்கிறார்கள். ஓடியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் பின்வாங்கவில்லை. ஒரு அடி பின்னெடுத்துவைப்பது கூட சண்டையிடுதலின் இலக்கணம்தான். தன்னைத்தானே தனிமை படுத்தி கொரோனாவிற்கு ஒதுங்கி இருத்தல்கூட கொரோனோ தொற்றுடன் நாம் சண்டையிடுகிறோம் என்றுதான் அர்த்தம்.
ஒரு நோய் தொற்று பரவுதலின் வரலாறு உங்களுக்கு வழங்கப்படுகிறது. சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஒரு தேசத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர் இரவு பேசப்போகிறார். வரலாற்றில் மக்கள் சிலவற்றை மிகவும் நம்புகிறார்கள். அவர்கள் எதை நம்புகிறார்களோ அவை தன் இயல்பில் பாதியைத்தான் வெளிக் கொணர்ந்திருக்கும். கடல் பொங்கிவழியும் என்று படித்திருந்தார்கள். ஆனால் கடல் பொங்கிவழியாது என்று நம்பினார்கள்.சுனாமி வந்தது. கடல் பொங்கும் என்று இன்னும் இந்த தலைமுறை நம்பும். அடுத்தச் சுனாமியும் அடுத்த தலைமுறையும் அதன் இழப்பை விழிப்புணர்வாய் சந்திக்கும் வரை அவர்களுக்குக் கடல் ஒரு காட்சிப்பொருள் தான். கடலின் இயல்பு வெறும் அலை மட்டும் அல்ல. சுனாமியும் தான்.
ஓர் இரவில் ஒரு தேசத்தின் தலைவர் நம் கையில் இருக்கும் பணத்தைச் செல்லாக் காசாக்குவார் என்று மக்கள் நம்பவில்லை. அப்படி நம்பியிருப்பது அவர்கள் இயல்பு. ஆனால் மக்களின் நம்பிக்கை அன்று உடைகிறது. இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு, இன்று இரவு அதே தேசத்துத் தலைவர் மறுபடியும் இரவில் பேசப்போகிறார் என்றதும் மக்களின் மனநிலையில் பதட்டம் வருகிறது. தன் மனநிலையில் நிதானத்தை இழக்கிறார்கள். கடைகளை நோக்கி ஓடுகிறார்கள். ஒரு வாரத்திற்குத் தேவையானவற்றைச் சேர்த்துவைக்கிறார்கள். மக்களின் மனதில் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பிற்கு முன்னால் பழைய அனுபவங்களின் வழி காயங்கள் அவர்களின் மனநிலையைத் தாக்கியிருக்கிறது. அவர்கள் அதிலிருந்து விடுபடவில்லை.
நோய் தொற்றுகாலத்தில் அனைத்து அனுபவங்களும், அதன் மூலம் கிடைத்த பாடங்களும் மக்களின் மனநிலைக்குள் வந்துபோகின்றன.இந்த சூழ்நிலைக்கான அனுபவங்களை அவற்றிலிருந்து எடுத்து அது கற்பித்த பாடங்களைச் செயல்படுத்த மனது துடிக்கிறது. இப்பொழுது வந்திருப்பது வினோதமானச் சூழ்நிலை என மூளை சொல்கிறது. இதற்கான அனுபவம் இல்லை என்பதை மனது ஏற்க மறுக்கிறது. மனம் பதைபதைக்கிறது. ஸ்தம்பிக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் மனநிலையைவிட ஒரு சமூகத்தின் மனநிலை என்பது சில காலகட்டங்களில் ஒன்றாய் மாறிவிடும்.தனக்கு ஓர் ஆபத்து என்னும்பொழுது முன் காலத்தில் பதைபதைத்துத் திணறி ஸ்தம்பித்து நின்று போன கூட்டம் அழிந்திருக்கிறது. பதைபதைப்பை நிதானமாக்கி “அடுத்து செய்வது என்ன?” என்று யோசித்த கூட்டம் தப்பித்தலுக்கான வழியைத் தேடியிருக்கிறது. தேடியவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தப்பியோடி பிழைத்த கூட்டம் இப்படித்தானே தன்னைத் தகவமைத்திருக்கும். எங்கோ ஏதோ செய்து தன்னை காப்பாற்றியிருக்கும். அப்படியென்றால் பிழைத்தலின் முக்கியத்துவம் சூழ்நிலைக்கேற்றபடி மாறிக்கொள்வதே ஆகும்.
ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வேகமாகப் பரவும் நோய் கொரோனா. சொல்லும் காப்பு நடவடிக்கை என்ன.தனக்குத்தானே சுத்தமாயிருத்தல், தனிமைபடுத்திக்கொள்ளல்.தப்பியோடி பிழைத்தோர் இந்நேரம் இருந்திருந்தால் இதைத்தான் செய்யச்சொல்லியிருப்பர். வாழ்க்கையில், வரலாற்றில் நம் மூதாதையர் சில கற்பிதங்களை நமக்கு விட்டுச்சென்றிருப்பர். அது பாடங்களாக இருக்கப்போவதில்லை. அவர்கள் வாழ்வியல் முறையாக இருக்கும். நாம்தான் அவற்றை நமக்கான கற்பிதங்களாய் படிக்க வேண்டும்.. நமக்கு வரும் நோயைக் குணமாக்குதல் என்பது ஒரு மனநிலை. நம்மிடமிருந்து யாருக்கும் போய்விடக்கூடாது என்பது பெருந்தன்மையின் மனநிலை. உங்கள் அருகில் நின்றுகொண்டிருப்பவர் உங்கள் நண்பராக இருக்கலாம். பத்து பதினைந்து வருடங்கள் பழகியவராக இருக்கலாம். அவர் இருக்கும் அபார்ட்மெண்ட் வீட்டின் அடுத்த பகுதியில் வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்து தங்கியிருக்கலாம். அவர் இவரோடு சகஜமாகப் பழகியிருக்கலாம். கைகளைக் கொடுத்திருக்கலாம். இதுதான் நோய் தொற்றின் முக்கியமான நிலை.நாம் ஒரு கிருமியை உள்வாங்கிக்கொள்வதை நிறுத்துவதோடு நம்மிடமிருந்து அடுத்தவருக்கும் பரப்பாமல் இருக்கவேண்டும்.
நமக்கு ஒன்றும் ஆகாது என்ற மனநிலை, நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் அப்படி இருக்காது. பதைபதைக்க ஆரம்பிக்கும்.நோய் தொற்று வந்துவிட்டால் தனிமைபடுத்தப்பட்டு உங்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். அதற்கான கட்டமைப்புகள் நம் ஊரில் இல்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு இன்னும் குறைந்தது பத்து நாட்களுக்காகவாவது நாம் தனிமைபடுத்திக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். நாம் மனதிற்குள் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நாம்தான் நோய் தொற்றிற்குக் காரணமாக இருக்கிறோம்.நம் மூலம் நோய் தொற்று பரவக்கூடாது. இங்கு நாம் என்பது நாம் மட்டும் அல்ல. நம் வீட்டைச் சுற்றி விளையாடிக்கொண்டிருக்கும் சிறு குழந்தைகளும் தான். உங்களை தினமும் பாந்தமாய் சிரித்து கடக்கும் வயது முதிர்ந்தவர்களும் தான். நமக்காக இல்லாவிட்டாலும் நம் சுற்றத்திற்காகவும் நாம் தனியாக இருத்தல் வேண்டும். நமக்கு வந்துவிடக்கூடாது என்பது ஒரு வகையான சுயநலம் சார்ந்த நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் நம் மூலம் அடுத்தவருக்குப் பரவிவிடக்கூடாது என்பது பொதுபுத்தி சார்ந்த அனைவருக்குமான நல்ல எண்ணமாகும்.
ஒரு பாடகி லண்டனில் இருந்து இந்தியா வந்து எம்பிக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார். எம்பிக்கள், குடியரசுத்தலைவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிறகு கலந்துகொள்கிறார்கள். இதுதான் ஸ்டேஜ் 3
நண்பர்களே. ஒருவர் ஒருவருக்கு கொடுத்து, அந்த ஒருவர் பலருக்கு கொடுத்துக் கொண்டிருப்பர்.உங்கள் பட்டியலில் எது தேவை என்று ஒரு பட்டியல் போடுங்கள்.அத்தியாவசியத் தேவை எது என்று பட்டியலில் டிக் செய்யுங்கள்.விழா, கேலிக்கூத்துகள் , ப்ரார்த்தனைக் கூட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள் நண்பர்களுடனான சந்திப்பு இவற்றைத் தவிர்க்கும் வண்ணம் குறியுங்கள்.நோய் வராமல் இருக்க இதை செய்யவேண்டுமா என கேட்டால், இதைத்தான் செய்யவேண்டும்.எயிட்ஸ், டெங்கு, சார்ஸ், பறவைக்காய்ச்சல் போன்றவை எல்லாம் வந்தன. நமக்கு வரவில்லையே, ஆகையால் இதுவும் வராது. நம் நாட்டிற்குள் வராது என்பதெல்லாம் மூடநம்பிக்கை.எயிட்ஸ், டெங்கு பரவும் விதமும் வரலாறும் வேறு வேறு. எப்பொழுதும் நாம் நமக்கு தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு தெரியாதவற்றை அனுமானிக்கிறோம். நமக்கு எது தெரியவேண்டுமோ அதன் காரண காரியங்களை ஆராய்ந்து அவற்றின் நுணுக்கங்களைத் தேடிப்பிடித்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
கொரோனாவை அம்மையுடனோ சார்ஸுடனோ டெங்குவுடனோ தொடர்புபடுத்தி கொரோனாவை அணுகுதல் தவறு. கொரோனாவை கொரோனாவாகவே அணுகவேண்டும்.இப்பொழுதைய தேவை, பதைபதைக்காமல் இருக்கவேண்டும். நிதானத்துடன் செயல்படவேண்டும்.கூட்டமான இடங்களில் யார் நோய் தொற்றுடன் இருப்பார் என்பதை கண்டறிதல் கடினம். நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு பத்திரமாய் இருத்தல் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நம்மை பெற்றவர்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வியல்முறையைக் கொடுக்கும்.நிதானமானச் செயல்பாடு. சுத்தமான வாழ்வியல்முறை. கட்டுக்கோப்பான சுகாதாரமுறை. நம் மனநிலையை அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ளுதல். இதுதான் இந்த ஒரு மாதத்திற்கான அசைக்கமுடியாத அஜெண்டா.
ஆரோக்கியத்துடன் அசைவறுமதி கேட்போம்…
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- கடைசியாய் எப்பொழுது முரண்பட்டீர்கள்? : பழனிக்குமார்
- "நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்" : பழனிக்குமார்
- "ஊட்டிக்குப் போகிறோம்..எப்படி ஆனாலும் போகிறோம்" -பழனிக்குமார்
- நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? நிறுவ முடியுமா?-பழனிக்குமார்
- யுவராஜ்ஜின் சவாலும், சச்சினின் அசைவறு மதியும்....பழனிக்குமார்
- தனித்துவமும், சுவாரஸ்யங்களும்-பழனிக்குமார்
- உங்கள் அக வயது என்ன?-பழனிக்குமார்
- குழந்தைமையிலிருந்து ஆளுமை -பழனிக்குமார்
- உங்களுக்குள் ஒரு அற்புதம் நிகழும்- பழனிக்குமார்
- தோல்வி தரும் மகிழ்ச்சி-பழனிக்குமார்
- பிரச்சினைகளைக் கண்டு அச்சப்படாதீர்கள் - பழனிகுமார்
- நமக்கு நேர்கின்ற வினைகளுக்கு நாம் எதிர்வினை ஆற்றுவதில் கவனம் வேண்டும் - பழனிக்குமார்
- உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? - பழனிக்குமார்
- ஒரு ‘தீ’க்கு இன்னொரு தீ தேவைப்படாது - பழனிக்குமார்
- 'எண்ணங்களே நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன' - பழனிக்குமார்
- இந்தப் பிரபஞ்சத்தின் அலைக்கு அளப்பரியச் சக்தி இருக்கிறது - பழனிக்குமார்
- ஒரு பொருள் அசைந்துகொண்டே இருப்பதில்தான் அதன் உயிர்ப்பு இருக்கிறது -பழனிக்குமார்